வண்டலூர்,
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்பு கோழிக்குஞ்சை வளர்க்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெருப்புக் கோழிகள்
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன. அவற்றை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து மகிழ்கின்றனர். உயிரியல் பூங்காக்களில் வளரும் நெருப்புக்கோழிகள் இயற்கையாக அடைகாத்து குஞ்சு பொறிப்பது மிகவும் அரிதாகும்.
கடந்த 2008-ம் ஆண்டு காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 9 வயதுள்ள ஒரு ஆண் மற்றும் பெண் நெருப்புக்கோழிகள், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு விடப்பட்டன. அவை இதுவரை 9 நெருப்புக்கோழிகள் இயற்கையாக பொறித்துள்ளன.
புதிய ஏற்பாடுகள்
அதேபோல இந்த ஆண்டு 6 முட்டைகள் இட்டு, தொடர்ந்து அடைகாத்து வந்தது. இதில் 4 முட்டைகள் வீணாகிவிட்டன. கடந்த மாதம் 23-ந் தேதி அன்று மற்ற இரண்டு முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளிவந்தஅதில் ஒரு குஞ்சு, தாய்க்கோழி மிதித்ததால் இறந்து விட்டது. மற்ற ஒரு குஞ்சை காப்பாற்றுவதற்காக தாயிடம் இருந்து பிரித்து, பூங்காவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அந்த குஞ்சை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக, மருத்துவமனையில் தனியறை ஒதுக்கப்பட்டது. அங்கு காகித அட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சணல்பை, அட்டை, மணல் ஆகியவை போடப்பட்டது. தாய்க்கோழியிடம் இருந்து உடல்சூடு கிடைப்பது போல அகச்சிகப்பு கதிர் உமிழும் 2 விளக்குகள் பொருத்தப்பட்டன.
நல்ல வளர்ச்சி
அங்கு வளரும் நெருப்புக்கோழி குஞ்சு, தேவைப்படும்போது விளக்குகளின் கீழே அமர்ந்து சூடு படுத்திக் கொள்கிறது. அதற்கு உணவாக குருணைத்தீவனம் மற்றும் கீரை மற்றும் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டபோது 700 கிராம் எடை இருந்த குஞ்சு, தற்போது நன்கு வளர்ந்து ஒரு கிலோ 570 கிராம் எடை உள்ளது. இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் நெருப்புக்கோழி குஞ்சு கைவளர்ப்பு மூலம் பேணப்படுவது இதுவே முதல் முறை என்று வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி தெரிவித்தார்.
No comments:
Post a Comment