பண்ருட்டி, பிப்.23–
காமராஜர் ஆட்சியில் செய்தி மற்றும் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர் பூவராகவன். இவர் 1962–ம் ஆண்டில் இருந்து 1967–ம் ஆண்டு வரை மந்திரியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.
அவர் மரணமடைந்த தகவல் அறிந்ததும் முக்கிய பிரமுகர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மறைந்த பூவராகவன் எனது இனிய நண்பர். எனக்கு பள்ளி தோழர், பெருந்தலைவர் காமராஜருக்கு மிகவும் நம்பிக்கையானவர். ஏழைகளுக்காக அதிகம் பாடுபட்டவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரணமடைந்த பூவராகவனுக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இருப்பு கிராமம். இவர் 1962–ம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் அவர் கடலூர் மற்றும் மேட்டூர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 2 முறை எம்.பி.யாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் மாநில துணை தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment