Thursday, 27 February 2014

சேலத்தில் அனுமதியின்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் புதிய போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?

சேலம்: சேலம் மாநகரில் அனுமதி பெறாமல் இயங்கும் ஆட்டோக்கள் மீது புதிய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சேலம் மாநகரில் செயல்படும், மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம், 50 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகரில், மொத்தம், 7,200 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதில், 1,200 ஆட்டோக்கள் மட்டுமே, ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டு முறையாக இயக்கப்படுகிறது.
ஆனால், 6,000 ஆட்டோக்கள் மாநகரில், முறையாக அனுமதி பெறாமல், ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்டோக்களில் கடந்த மாதம் வரை, ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை, தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், ஃபிப்.,1ம் தேதி முதல் கட்டணம், 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அதிரடி வசூல் நடத்தப்பட்டு வருகிறது.
போலீஸ் கமிஷனராக இருந்த மஹாலி, கோல்டன் ஹவர் திட்டத்தை செயல்படுத்தி வந்தார். இந்த திட்டத்தில் ஆட்டோ டிரைவர்களும் இருந்ததால், கமிஷனர் மஹாலி, ஆட்டோக்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். இதனால், ஆட்டோ டிரைவர்கள், தங்கள் இஸ்டம் போல் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த போக்குவரத்து பிரிவு போலீஸார், அதிகாரிகள் மீது கமிஷனர் மஹாலியிடம் புகார் அளித்ததால், அவர்களும் இதை கண்டு கொள்ள வில்லை. இதனால், மாநகரில், ஆட்டோக்கள், அதை இயக்கும் டிரைவர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதோடு, விபத்துக்களும் அதிகரித்தே காணப்படுகிறது.
ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் பெரும்பாலானோர், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன் படுத்துபவர்களாக இருப்பதால், ஆட்டோக்களில் ஏறும் பயணிகள் மட்டுமின்றி, சாலையில் வாகனங்களை இயக்குபவர்களும், அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் அதிகரித்துள்ள ஆட்டோக்கள், அவற்றால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. புதிதாக பொறுப்பெற்றுள்ள, சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், இந்த பிரச்னைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பு, அனைவரிடமும் எழுந்துள்ளது.
இது குறித்து கமிஷனர் அமல்ராஜியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
தற்போது தான் பொறுப்பை ஏற்றுள்ளேன். சேலத்தில் ரவுடிகள் அட்டகாசம் குறைந்துள்ளதாகவும், குண்டாஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மட்டும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆட்டோக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
சேலம் மாநகர ஷேர் ஆட்டோ சங்க தலைவர் தட்சணாமூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது:
சேலம் மாநகர போலீஸார், போக்குவரத்து துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். சேலம் மாநகரில், 50 ஷேர் ஆட்டோக்களை மட்டுமே இயக்கி கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கு மாறாக அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி கட்டணத்தை, 10 ரூபாயாக அதிகரித்தும் வசூலித்து வருகின்றனர்.
ஆனால், நாங்கள் பழைய கட்டணத்தையே வசூலித்து வருகிறோம். மாநகரில் ஷேர் ஆட்டோக்கள் பெயரில் இயக்கப்படும், பயணிகள் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே பிரச்னை முடிவுக்கு வந்து விடும், என்றனர்.

No comments:

Post a Comment