Sunday, 23 February 2014

கூட்டணி இழுபறி: பா.ஜனதா–காங்கிரசை அலைக்கழிக்கும் விஜயகாந்த்

சென்னை, பிப்.23–கூட்டணி இழுபறி: பா.ஜனதா–காங்கிரசை அலைக்கழிக்கும் விஜயகாந்த்
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் தமிழகஅரசியல் கட்சிகள் படாதபாடுபடுகிறது. தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜனதாவும் வலுவான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. கூட்டணியில் இருந்து விலகிய தி.மு.க.வுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க காங்கிரஸ் பல வழிகளில் முயற்சித்தும் பலன் இல்லை. காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. பக்கம் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டதால் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. விஜயகாந்துடன் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து விஜயகாந்தை காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தார்.
இதற்கிடையில் விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதாவும், தி.மு.க.வும் பகீரத முயற்சிகள் மேற்கொண்டன. மவுசு அதிகரித்ததால் விஜயகாந்தின் பேரமும் அதிகரித்தது. இதனால் தி.மு.க. தரப்பில் வந்தால் பார்க்கலாம் என்று விட்டு விட்டனர்.
பா.ஜனதாவும், காங்கிரசும் விஜயகாந்தை இழுக்க மல்லு கட்டுகின்றன. இதை பார்த்த விஜயகாந்தும் இரு கட்சிகளுக்கும் போக்கு காட்டி வருகிறார்.
விஜயகாந்த் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து திரும்பிய பிறகு டெல்லி தலைவர்கள் விஜயகாந்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் கூட்டணி பேரத்தை பேசி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தே.மு.தி.க. தங்கள் பக்கம் வரும் என்ற நம்பிக்கையில் காங்கிரசார் உள்ளனர்.
அதே நேரத்தில் பா.ஜனதாவுடனும், விஜயகாந்த் பேசி வருகிறார். 16 தொகுதிகள் கேட்டதற்கு 12 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு பா.ஜனதா தரப்பிலும் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று கூட்டணி உறுதியாகி விடும் என்று பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் பா–ஜனதா தலைவர்களும், தே.மு.தி.க. தலைவர்களும் ஈடுபட்டனர். திடீரென்று விஜயகாந்த் தரப்பில் 18 சீட் வேண்டும் என்று கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் சிக்கல் எழுந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வதுபோல் விஜயகாந்த் போடும் அரசியல் நாடகம் இரு தேசிய கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
பா.ஜனதா தலைவர்களிடம் உங்களோடுதான் கூட்டணி என்று கூறி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்களிடமும் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் எந்த பக்கம் செல்வார்? என்று தெரியாமல் பா.ஜனதாவும் காங்கிரசும் தவிக்கின்றன.
பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் வருகிற 27–ந்தேதி வெளியாகிறது. பல மாநிலங்களில் கூட்டணி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியலும் தயாராகி விட்டது. தமிழ் நாட்டிலும் விரைவாக கூட்டணியை உறுதி செய்யும்படி நரேந்திரமோடி மாநில தலைமையை கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே 27–ந்தேதிக்குள் கூட்டணியை உறுதி செய்ய பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் இன்று திடீரென்று சிங்கப்பூர் புறப் பட்டு சென்றார். எப்போது திரும்புவார் என்று தெரிய வில்லை. சிங்கப்பூரிலும் கூட்டணி குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி பா.ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
பாரதீய ஜனதா கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்பட வில்லை. தே.மு.தி.க., பா.ம.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு தான் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். பாரதீய ஜனதா எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பிறகே முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் விஜயகாந்தை தி.மு.க. கூட்டணிக்கு இழுக்கும் இறுதிக்கட்ட முயற்சியும் நடக்கிறது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் சந்தானம் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.

No comments:

Post a Comment