Thursday, 27 February 2014

ராஜினாமா! - கடற்படை தளபதி ஜோஷி பதவி விலகினார் : விபத்தில் நீர்மூழ்கி கப்பல் சிக்கியதன் எதிரொலி

மும்பை: "ஐ.என்.எஸ்., சிந்துரத்னா' நீர்மூழ்கி கப்பலில், நேற்று காலை, திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு அதிகாரிகள் உட்பட, ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று, கடற்படை தளபதி, ஜோஷி நேற்று பதவி விலகினார்.

வெடித்து சிதறியது : மேற்கு கடற்படை பிரிவை சேர்ந்த, ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல், சில ஆண்டுகளுக்கு முன், ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டது. அதில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு, நம் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை கடலில் இருந்து, 70 கி.மீ.,யில், ஆழ்கடலில் நிறுத்தப்பட்டிருந்த சிந்துரத்னாவில், அதிகாரிகள், ஊழியர்கள் என, 70 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென, பேட்டரி ஒன்று, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து, ஏராளமான புகை கிளம்பி, நீர்மூழ்கியின் உள் அறைகளை நிரப்பியது. பேட்டரி வெடித்த அறையில், பணியில் இருந்த, இரண்டு அதிகாரிகள் உட்பட, ஏழு பேர், அதிக புகையை சுவாசித்து, மயங்கி விழுந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி : உடனடியாக, மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டு, நீரின் மேல் மட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நீர்மூழ்கியிலிருந்து, காயமடைந்த வீரர்கள், படகுகளில் ஏற்றப்பட்டு, மும்பை கடற்படை தளத்தில் உள்ள, "ஐ.என்.எஸ்., அஷ்வினி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேட்டரியில் ஏற்பட்ட கசிவே, புகை அதிக அளவில் வெளியேற காரணம் என, முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக, கடற்படை கப்பல்கள், அதிக அளவில் விபத்தில் சிக்குவதால் அதிருப்தியில் இருந்த, கடற்படை தளபதி, டி.கே.ஜோஷி, நேற்று, சிந்துரத்னா விபத்தில் சிக்கியதை அறிந்ததும், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
ராஜினாமா கடிதத்தை எழுதி, அதை, ராணுவ அமைச்சர், அந்தோணிக்கு அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட அந்தோணி, தற்காலிக தளபதியாக, துணை தளபதி, ராபின் தோவாவை நியமித்தார். புதிய தளபதி நியமிக்கப்படும் வரை அவர், இப்பொறுப்பில் தொடர்வார் என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகரிக்கும் விபத்துகள்
2013 - "ஐ.என்.எஸ்., சிந்து ரக் ஷக்' நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி, 18 வீரர்கள் பலி.
2014, ஜனவரி - "ஐ.என்.எஸ்., சிந்து கோஷ்' திடீரென தரை தட்டி நின்றது.
ஐ.என்.எஸ்., ஐராவத்' போர்க்கலம், திடீரென கடலில் மூழ்கியது.
"ஐ.என்.எஸ்., பெட்வா' மர்ம பொருள் மீது மோதி உடைந்தது.
"ஐ.என்.எஸ்., கொங்கன்' விசாகப்பட்டினம் கடலில் தீப்பிடித்து எரிந்தது.
ஓராண்டிற்குள், கடற்படையின் பல தரப்பட்ட கப்பல்களும், பயங்கர விபத்தில் சிக்கியுள்ளதால், கடற்படையின் மேற்கு பிரிவு, கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.


ஆறு மாதத்தில் அடுத்த விபத்து

2005 டிச.,: மும்பை துறைமுகத்தில் பயிற்சி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த ஐ.என்.எஸ் திரிசூல் போர்க்கப்பல், அம்புஜா லட்சுமி என்ற வணிக கப்பலுடன் மோதியது. துறைமுகத்தில் இருந்த ரேடார் கருவிகளாலும், அம்புஜா லட்சுமி கப்பலில் இருந்த ரேடார் கருவிகளாலும், ஐ.என்.எஸ் திரிசூல் கப்பல் மோதுவதை தடுக்க இயலவில்லை
.
2006 ஏப்., : கோவா கடற்கரையில் இருந்து 20 நாட்டிகல் மைல் தூரத்தில், கடல் பகுதியில், ஐ.என்.எஸ். பிரஹார் கப்பலும், எம்.வி.ராஜிவ் காந்தி கப்பலும் மோதியது. ஐ.என்.எஸ்.பிரஹார் கப்பல் இரவு 9.45 மணிக்கு கோவாவில் இருந்து மும்பை திரும்பிய போது, இவ்விபத்து நடந்தது.
2008 ஜன.,: வடக்கு மும்பையில் ஐ.என்.எஸ். சிந்துகோஷ் என்ற நீர்மூழ்கி கப்பல், எம்.வி. லீட்ஸ் கேஸ்ட்டில் என்ற வெளிநாட்டு கப்பலுடன் மோதியது. போரில் பயன்படுத்தப்படும் இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது இதன் தரத்தின் மீது கேள்வி எழுப்பியது.
2010 பிப்., : விசாகபட்டினம் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்ஷாக் நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கடற்படை வீரர் பலி. 2 பேர் காயம். இதன் பின், பராமரிப்புக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது. பழுதுபார்க்கும் பணி முடிந்து, 2013 ஜன., 27ல் இந்திய கடற்படையில் சேர்ப்பு.
2011 ஜன., : மும்பையில் சங் ராக் கலங்கரை விளக்கம் அருகே, ஐ.என்.எஸ். வித்யாகிரி கப்பல், சைப்ரஸ் நாட்டின் எம்.வி. நேர்ட்லேக் கப்பலுடன் மோதியது. இதையடுத்து
வித்யாகிரி கப்பலின் இன்ஜின் மற்றும் பாய்லர் அறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பின் இக்கப்பல் கடற்
படையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது.
2013 ஆக., 14: மும்பை கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷாக் நீர்மூழ்கி கப்பலில் திடீரென வெடி சத்தம் கேட்டது. பின் கப்பல் முழுவதும் தீ பற்றியது. பணியில் இருந்த 18 கடற்படை வீரர்கள் பலியாகினர். (இந்த கப்பலில் தான் 2010 பிப்.,ல் விசாகபட்டணத்தில் விபத்து ஏற்பட்டது).
2014 பிப்., 26: மும்பை கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்., சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில், திடீரென வெளியேறிய புகை காரணமாக 7 கடற்படை வீரர்கள் காயம். 2 பேரை காணவில்லை.

No comments:

Post a Comment