சேலம்,
சேலம் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க.வை வெற்றி பெறச்செய்வது பெண்களின் கையில்தான் உள்ளது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
மகளிர் மாநாடு
சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி, தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான பாட்டாளி இளம் பெண்கள் எழுச்சி மகளிர் மாநாடு நேற்று பகல் சேலம் போஸ் மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளருமான கார்த்தி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் இரா.அருள் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் வேட்பாளர் அருளை அறிமுகம் செய்து வைத்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சிறப்புரையாற்றியதாவது:–
வன்கொடுமை சட்ட திருத்தம்
சேலம் மாநகரில் இவ்வளவு பெண்களை கூட்டுவது என்பது பெரிய விஷயம். என்ன பேசுகிறோம் என்பதை கேட்க ஆர்வமாக வந்துள்ள உங்களை பாராட்டுகிறேன். சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் இரா.அருள், ஏற்கனவே 2 முறை மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இன்று அவரை நீங்கள்(பெண்கள்) டெல்லிக்கு அனுப்பி வைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வாய்ப்பை அருளுக்கு வழங்கினால், முதலாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சி எடுப்பார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அதுபற்றி பேசபோவதில்லை.
15, 16, 17 வயது பெண்களை காதலிக்கிறேன் என சொல்லி, காதல்நாடகமாடி வாலிபர்கள் கடத்தி சென்று விடுகிறார்கள். இதனால், தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன், நரிக்குறவர் இன பெண்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. எனவே, பெண்கள் திருமண வயது 18 என்பதை 21 வயது ஆக்குங்கள் என்கிறோம். அதற்கு முன்பு திருமணம் நடந்தால், அது பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் திருமணமாக இருக்க வேண்டும். அப்படியொரு சட்ட திருத்தம் கொண்டுவந்தால், அது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு பெண்களாகிய நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து அருளை வெற்றி பெற செய்திட வேண்டும்.ஆண்கள் கல்வியில் 87 சதவீதமும், பெண்கள் 73 சதவீதமாகவும் உள்ளனர். 14 சதவீதம்தான் வித்தியாசம். நாடு முன்னேற வேண்டுமானால், பெண்களின் கல்விநிலையை வைத்துதான் அளவிட முடியும். குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்க வேண்டும்.
சாராயம் ஒழிக்க பா.ம.க. ஆட்சி
பெண்கள் நாட்டின் கண்கள் என்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் 2 கட்சிகளும் மாறி, மாறி சாராயத்தை கொடுத்து தாலியை அறுத்து விதவை ஆக்குகிறார்கள். இந்த சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால், பா.ம.க. ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். அது உங்கள் கையில்தான் உள்ளது. மேலும் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால், ஒரே மாதிரியான தரமான இலவச கல்வி அனைவருக்கும் வழங்குவோம். இதற்கான திட்டத்தை கடந்த 2 ஆண்டுக்கு முன்பே பா.ம.க. வகுத்து அதை புத்தகமாக வெளியிட்டுள்ளது. அத்துடன் ஊழலை ஒழிக்கவும் என்னென்ன வழிகள் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டை போக்கி மின்மிகு மாநிலமாக மாற்றுவேன் என 3 மாதத்திற்கு ஒருமுறை ஜெயலலிதா பறைசாற்றி வருகிறார். இதுவரை 10 முறையாவது சொல்லி இருப்பார். மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என தெரியாத நிலை இன்றும் உள்ளது. இதனால், விவசாயிகள், சிறு தொழிற்சாலை நடத்துவோர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெற்றி உங்கள் கையில்
ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே என்பார்கள். ஆனால், ஆவதும் பெண்ணாலே..ஆவதெல்லாம் பெண்ணாலே, அழிவதும் மட்டும் ஆண்களாலே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கும் சக்தி படைத்தவர்கள் பெண்கள் மட்டும்தான். பெண்களுக்கு சமபங்கு, சம அதிகாரம் பெறப்பட வேண்டும். அதற்கான மாற்றத்தை கொண்டுவருவது பெண்கள் கையில்தான் உள்ளது. எனவே, சேலம் எம்.பி. தொகுதியில் பா.ம.க. வெற்றி பெறுவது பெண்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. பா.ம.க. அந்த மாற்றத்தை நிகழ்த்தி காட்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பா.ஜனதா கூட்டணி முடிவாகி விட்டதா?
கூட்டம் முடிந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு, டாக்டர் ராமதாசிடம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவாகி விட்டதா? என கேட்டனர். அதற்கு டாக்டர் ராமதாஸ் ‘ஆம்‘ என்றும் சொல்லாமல், ‘இல்லை‘ என்றும் சொல்லாமல் புன்முறுவல் செய்தபடி பதில் ஏதும் கூறாமல் புறப்பட்டு சென்றார்.இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.கண்ணையன், மாவட்ட செயலாளர்கள் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ், பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment