சென்னை, பிப். 18–
சட்டசபையில் இன்று தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் பேசும்போது, தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் 5 நாட்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், துரைமுருகனுக்கு அளித்த தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தினார்.
பின்னர் பட்ஜெட் மீதான விவாதத்தில் சந்திரகுமார் பேசும்போது, ‘‘அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் விரிவாக பதில் அளித்தனர்.
அப்போது சந்திரகுமாருக்கும் அமைச்சர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கே.பி.முனுசாமி குறிப்பிடும் போது, ‘‘உங்களுக்காக வெயில், மழை என்று பாராமல் முதல்–அமைச்சர் புரட்சித்தலைவி கடுமையாக பிரசாரம் செய்ததால்தான் நீங்கள் ஜெயித்து இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்கள் தலைவரைப் போல நீங்களும் உணர்ச்சிவசப்படுகிறீர்களே. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்ததால்தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறுகிறீர்களே.
அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தது. அ.தி.மு.க.தான். 1 லட்சத்து 19 ஆயிரம் பதவிகளில் 95 சதவீத இடங்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே இது புரட்சித்தலைவிக்கு கிடைத்த வெற்றி. உங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல என்றார்.
சந்திரகுமார்:– தே.மு.தி.க. வேட்பாளர்கள் நின்ற ஒரு தொகுதியில் கூட முதல்–அமைச்சர் பிரசாரம் செய்யவில்லை.
அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:– 2011 தேர்தலின் போது மாவட்டத்தில் ஒரு இடத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் எல்லா வேட்பாளர்களையும் வரவழைத்து அறிமுகப்படுத்திதான் முதல்–அமைச்சர் ஓட்டு கேட்டார். நீங்களும் வந்தீர்கள். மற்ற வேட்பாளர்களும் வந்தார்கள். உங்கள் சின்னத்தையும் சொல்லித்தான் ஓட்டு கேட்டார். அந்த தேர்தலில் தமிழக மக்களை பார்த்து புரட்சித் தலைவிதான் முதல்–அமைச்சராக வேண்டும் என்று வாக்கு கேட்டோம்.
தனிப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திற்காகவோ, சந்திரகுமாருக்காகவோ மக்கள் வாக்களிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் நான் நின்றாலும் ஜெயிக்க முடியாது. சந்திரகுமாராலும் முடியாது. தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர புரட்சித் தலைவியால்தான் முடியும் என்ற நம்பிக்கையில் தமிழக மக்கள் புரட்சித் தலைவிக்காக வாக்களித்தார்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment