சேலம்,
‘நாட்டின் வருங்கால தூண்களான, குழந்தைகளை பாலியல் தொல்லை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்’ என்று ஆணையத்தலைவர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்–2012 குறித்த விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆ.தேவகி வரவேற்று பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ஈஸ்வரன் வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி பேசியதாவது:–
இந்த ஆணையத்தின் மூலம் குழந்தைகள் தொழிலாளர்கள் தடைச்சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், கட்டாய கல்வி சட்டம், குழந்தைகளை பாலியியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் சட்டம், இளைஞர் நீதி சட்டம் ஆகிய சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளின் உரிகைளையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தப்படுகிறது.
கடும் தண்டனை
இந்திய மக்கள் தொகையில் 18 வயதிற்குட்பட்டோர் சுமார் 42 சதவிகிதத்தினர் உள்ளனர். குழந்தைகளுக்கான உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்திய உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இளைஞர் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச்) சட்டம்–2000 ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகளின் உரிமைகள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபைக்கு நம் இந்தியா அனுப்ப வேண்டும்.
குழந்தைகளுக்கான உரிமைகள் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அதன்மீது தக்க விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களுக்கு ஆணையம் சார்பில் பரிந்துரைக்கப்படுகிறது. பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகளை நேரடியாக சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை பெற்றுத் தரப்படுகிறது. சிவகங்கை, திருப்பூர், வேலூர், நாமக்கல் மாவட்டங்களில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஆணையம் உறுதுணை
புது டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், நம் ஆணையத்திற்கு பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளிடமிருந்தும் 35 வழக்குகளும், ஏனைய நிறுவனங்களிடமிருந்தும் 11 வழக்குகளும் வரப்பெற்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. 50 வழக்குகள் தினசரி நாளிதழ்கள் மூலம் பார்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குழந்தைகளுக்கு எதிராக எங்கெங்கு அநீதிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் ஆணையம் உறுதுணையாக இருந்து குழந்தைகளை காப்பாற்றும்.
குழந்தைகள் இயற்கையாகவே பயந்த சுபாவம் கொண்டவர்கள், அவர்கள் நம் நாட்டின் வருங்கால தூண்கள், அவர்களை நல்ல முறையில் பேணிக் காக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகளை பாதுகாப்போம், வளமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
முன்னதாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்–2012 குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகரபூஷணம் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அஸ்தம்பட்டியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று விஜயராகவாச்சாரியார் ஹாலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அரசினர் கலைக்கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என சுமார் 600–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வல முடிவில் விஜயராகவாச்சாரியார் ஹாலில், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு, ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவவேலியப்பன், ஸ்மைல் திட்ட இயக்குனர் விஸ்வநாதன், இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் ரூபி தியாகராஜன், சைல்டு லைன் இயக்குனர் அமலோர்பவராஜ், லைப் லைன் டிரஸ்ட் திட்ட இயக்குனர் முனைவர். கல்பனா, அரசினர் கூர்நோக்கு இல்லக் கண்காணிப்பாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment