Sunday, 23 February 2014

கீழ்ப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் பயணிகளிடம் துணிகர கொள்ளை

சென்னை, பிப். 23–
சென்னையில் அதிகாலையில் ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி டிரைவர்களே வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:–
டெல்லியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வரும் சுந்தர் நேற்று காலையில் சென்னை வந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்யாலயா ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இவர் ஆட்டோவில் புறப்பட்டார்.
மன்றோ சிலை அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் ஓரமாக ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் சுந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ரூ. 35 ஆயிரம் பணம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினார்.
இதேபோல கீழ்ப்பாக்கத்திலும் தொழில் அதிபர் ஒருவரிடமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் ஆதித்யா. தொழில் அதிபரான இவர், பெங்களூர் செல்வதற்காக நேற்று அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டார். அருகில் உள்ள பர்ணபி சாலையில் வைத்து, சென்ட்ரல் செல்வதற்காக இவர் ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் வாலிபர் ஒருவரும் அமர்ந்திருந்தார். சிறிது தூரம் சென்றதும் இருட்டான பகுதியில் டிரைவர் ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் ஆட்டோவில் இருந்த வாலிபருடன் சேர்ந்து டிரைவர் கத்தியை காட்டி மிரட்டி, ஆதித்யாவிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பினர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் இதேபோன்று ஏற்கனவே 2 முறை ஆட்டோவில் சவாரி சென்ற பயணிகளிடம் டிரைவர்களே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் நேற்று நடை பெற்ற சம்பவம் 4–வது சம்பவமாகும்.
இதற்கிடையே திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. ஆட்டோ நம்பரை வைத்து துப்பு துலக்கிய போலீசார், ராயபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (42) என்ற ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment