சென்னை, பிப். 6–
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பொது மக்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான புகார்கள் இங்கு வந்து குவிந்தன.
இதற்கான புகார் மையத்தில் போலீஸ் அதிகாரிகள் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வந்தனர். சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தினமும் திருவிழா போல கூட்டம் அலை மோதியது.
புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரிக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புகார் கொடுக்க வருபவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் புதிய நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் பொது மக்களிடம் இருந்து கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக புகார் பெறப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட வேண்டும்.
அங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் உதவி கமிஷனர் அல்லது துணை கமிஷனர் அல்லது இணை கமிஷனர் ஆகியோரிடம் புகார் மனுக்கள் கொடுக்கலாம். அதன் பிறகும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கமிஷனர் அலுவலகத்தை நாடலாம் என்று கூறப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment