புதுச்சேரி, மார்ச் 28–
புதுவை வெங்கட்டா நகர் 4–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 77). இவர் வைத்திலிங்கம் முதல்–அமைச்சராக இருந்தபோது அவரது தனி செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பிரேமா (70). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கிருஷ்ணசாமியும், அவரது மனைவி பிரேமாவும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது டிப்–டாப் உடை அணிந்து கையில் லேப்–டாப்புடன் கூடிய ஹேன்பேக்குடன் கிருஷ்ணசாமியின் வீட்டு கதவை தட்டினர். கிருஷ்ணசாமி கதவை திறந்து அந்த வாலிபரிடம் என்ன என்று கேட்டபோது ஆதார் அட்டையை சரிபார்க்க வந்ததாக அந்த ஆசாமி கூறினார்.
கிருஷ்ணசாமியும் அந்த வாலிபரை வீட்டின் வரவேற்பு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி பிரேமாவும் குடும்ப விபரங்களை அந்த வாலிபர் கேட்டுக்கொண்டே வந்தார். குடும்பத்தின் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த ஆசாமி ஆதார் அட்டைகளை கொண்டு வந்து காண்பிக்கும்படி கேட்டார்.
இதையடுத்து பிரேமா பீரோவில் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து வந்தார். ஞாபக மறதியில் சாவியை பீரோவிலேயே பிரேமா வைத்து விட்டார். இதனை கவனித்து விட்ட அந்த டிப்–டாப் ஆசாமி அவர்களை திசை திருப்பும் நோக்கில் இறங்கினான். வீட்டை அழகாக வைத்து இருக்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது என்று பாசமாக கேட்டான். தனது வீட்டையும் இதுபோன்று வைத்துக்கொள்ள ஆசையாக உள்ளது என்று பேசி வீட்டை சுற்றி காண்பிக்கும்படி அந்த ஆசாமி கூறினார்.
வீட்டின் ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்த அந்த ஆசாமி கடைசியாக சமையல் அறையை காண்பிக்கும்படி கூறினான். சமையல் அறைக்கு அழைத்து சென்று அங்கு களைப்பாக இருக்கிறது என்று கூறி வரவேற்பு அறையில் அமர்ந்திருப்பதாகவும் அதனால் மோர் தயார் செய்து தரும்படி கேட்டான்.
டிப்–டாப் ஆசாமி கனிவாக பேசியதால் அதனை நம்பி கணவன்–மனைவி இருவரும் மோர் தயார் செய்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த வாலிபர் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து கணவன்–மனைவி இருவரும் மோருடன் வந்து பார்த்தபோது டிப்–டாப் ஆசாமியை காணாமல் திடுக்கிட்டனர். பின்னர் சந்தேகம் அடைந்து பீரோவை திறந்து பார்த்தபோது நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இதுகுறித்து கிருஷ்ணசாமி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் கிருஷ்ணனும்–பிரேமாவும் தனியாக இருப்பதை பல நாட்களாக நோட்டமிட்டு டிப்–டாப் ஆசாமி நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து டிப்–டாப் ஆசாமியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment