Monday, 9 March 2015

அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்-விஜயகாந்த் அறிக்கை

சென்னை, மார்ச் 9–அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்-விஜயகாந்த் அறிக்கை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
திருநெல்வேலி வேளாண்மை பொறியியல் துறையில் ஓட்டுனர் பணியிடங்களை நியமனம் செய்ததற்கு, அத்துறையின் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம், இத்துறையின் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி லஞ்சம் கேட்டதாகவும், கடுமையான சொற்களால் அவரை மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் நேர்மையான அதிகாரி என அப்பகுதியில் நற்பெயர் எடுத்த திருநெல்வேலி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் அ.தி.மு.க. கட்சி பதவியில் இருந்தும் வேளாண்மைத்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கத்திற்கு வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, ஈரோட்டில் உள்ள இடத்தை விற்பனை செய்வதில் வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர், வாரியத்தலைவர் மற்றும் துறையின் அமைச்சர் மீது புகார் எழுந்தது. வீடியோ ஆதாரங்களுடன் அந்த இடம் விற்பனை குறித்த சர்ச்சையில் சிக்கிய ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி தற்கொலை செய்துகொண்டார்.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்துறையின் அமைச்சருக்கே கூடுதல் பொறுப்பாக வேளாண்மைத்துறையையும் அளித்து இருப்பது வியப்பாக உள்ளது. அவருடைய துறையில் ஏற்கனவே உதவி செயற்பொறியாளர் தற்கொலை செய்து கொண்டதில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதற்குத்தான் இந்த கூடுதல் பொறுப்போ? இதுதான் அதற்குரிய தகுதியோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுக அரசின் ஒவ்வொரு அமைச்சர் மீதும் இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இது குறித்து கேட்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ விளக்கம் அளிக்க முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் முன் வருவதில்லை, சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ வாயே திறப்பதில்லை.
தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக உள்ளார். தவறு செய்கின்ற அமைச்சர்களை தட்டிக்கேட்கும் திராணியும், நேர்மையும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வெளியே தெரிந்த பின்பும் அமைச்சர்கள் மீது இவர் ஏன் எவ்வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை? அமைச்சர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் இவர் உள்ளாரா? வேறு ஏதேனும் மறைமுக நிர்பந்தம் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறதா? மேலும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்தால் தான் இதில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment