வாட்ஸ்–அப் இன்றைய இளம் தலைமுறையினரில் பெரும்பாலானோர் இதில் மூழ்கியே கிடக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு வாலிப பட்டாளங்களை கவர்ந்துள்ள வாட்ஸ்–அப்பில் நல்லதும் கெட்டதுமாக ஏராளமான தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன.
ஆபாச ஆடியோக்கள், வீடியோக்களுக்கும் வாட்ஸ்–அப்பில் பஞ்சமில்லை. சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசி வாட்ஸ்–அப்பில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக வாட்ஸ்–அப்பில் வெளியான பல்வேறு வீடியோக்களும், போட்டோக்களும் வாட்ஸ்–அப் மீதே ஒரு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவருடன், திருநங்கைகள் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட வீடியோ, பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்ஸ்பெக்டரை கடிந்து கொள்ளும் ஆடியோ என அடுத்தடுத்த வாட்ஸ்–அப் வெளியீடுகள் போலீஸ் வட்டாரத்தையே கலங்கடித்தன.
தொழில் நுட்ப வளர்ச்சியில் எப்போதுமே நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதனை நாம் பயன்படுத்தும் விதத்திலேயே அது இருக்கிறது. இதற்கு உதாரணமாக 16 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தவித்து வந்த சென்னை வாலிபர் ஒருவர் வாட்ஸ்–அப்பின் உதவியால் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். நெஞ்சை நெகிழ வைக்கும் இச்சம்பவம் சென்னை திருவொற்றியூரில் அரங்கேறியிருக்கிறது.
அந்த வாலிபர் யார்? அவர் காணாமல் போனது எப்படி? 16 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வாலிபரை வாட்ஸ்–அப் குடும்பத்தினருடன் கொண்டு சேர்த்தது எப்படி?
அது பெரிய்..ய பிளாஸ் பேக்.
திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர்கள் தாமோதரன்–சுந்தரி. இந்த தம்பதிகளுக்கு சரவணன் (33), ரவிச்சந்திரன் (31), பார்த்திபன் (30), கோபி (27), சிகாமணி (23), ஏழுமலை (21) ஆகிய 6 மகன்கள். கடந்த 1999–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுந்தரியும், தாமோதரனும் குடும்பத்தோடு புதுச்சேரிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றனர்.
அப்போது 5–வது மகனான சிகாமணிக்கு 7 வயது. அருகில் உள்ள மாமா வீட்டுக்கு தனியாக சென்ற சிகாமணி வழி தெரியாமல் எங்கேயோ சென்று விட்டார். இதனால் பதறிப்போன பெற்றோரும், குடும்பத்தினரும், அந்த பகுதி முழுவதும் அவரை தேடினர். ஆனால் சிகாமணி சிக்கவில்லை.
இதையடுத்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்த தாமோதரன்–சுந்தரி தம்பதியினர், உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்தனர். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து மகனை தேடி அலைந்த பெற்றோர் தவித்துப்போய் திருவொற்றியூருக்கு திரும்பினர்.
இதன் பின்னர், சென்னையில் உள்ள தொண்டு நிறுவனங்கள் பலவற்றிலும் ஏறி இறங்கினர். ஆனால் சிகாமணியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. பெற்ற தாய்க்குத்தான் தெரியும், பிள்ளையின் பிரிவு என்பார்கள். அந்த வகையில் பாசக்கார தாயான சுந்தரியும், மகன் எப்படியும் கிடைத்துவிட மாட்டானா? என தினம் தினம் ஏக்கத்திலேயே காலம் தள்ளினார். கோவில் கோவிலாக ஏறி குறிகேட்டார். அப்போதெல்லாம் ‘‘உன் மகன் பத்திரமா இருக்கான்மா’’.. ‘‘அவனா உன்ன தேடி வருவான்’’ என்று சாமியார்கள் கூறி வந்துள்ளனர். இந்த நம்பிக்கை ஒன்றே சுந்தரியின் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தது.
இது ஒரு புறமிருக்க... குடும்பத்தை பிரிந்து விடுதியிலேயே வாழ்க்கையை ஓட்டி வந்தார் மாயமான சிகாமணி. தாய்–தந்தை, அண்ணன்கள், தம்பி என அத்தனை உறவுகள் இருந்தும் அனாதையை போல இருக்க வேண்டியதாகி விட்டதே என, சிகாமணி, தினமும் கண்ணீர் சிந்தினார். பேசின்பிரிட்ஜ் பகுதியில் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்த சிகாமணி, தற்போது எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.
வாட்ஸ்–அப் ஏற்படுத்தி வரும் பரபரப்புகளை பார்த்து, சிகாமணியின் மனதிலும் ஒரு எண்ணம் உதித்தது. நாமும், வாட்ஸ்–அப் மூலமாக குடும்பத்தினரை தேடிப்பார்த்தால் என்ன? என்று எண்ணிய சிகாமணி தனது குரலை ஆடியோவாக பதிவு செய்து, வாட்ஸ்–அப்பில் அனுப்பினார். அதில், தான் காணாமல் போனது பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் கூறி இருந்தார். கடந்த 19–ந்தேதி இரவு 8 மணி அளவில் வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் பரவிய இந்த தகவல் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் செல்போனுக்கும் சென்றது.
சிறுவயதில் காணாமல் போன சிகாமணியை சுந்தரியும் அவரது குடும்பத்தினரும் தேடி அலைவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியும்.
இதையடுத்து கார்த்திக், சுந்தரியின் வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த ஆடியோவை போட்டுக்காட்டினார். அதில் சிகாமணியின் 2 செல்போன் எண்களும் இருந்தன. உடனடியாக அந்த நம்பருக்கு போன் செய்து பேசினர். சுமார் 1 மணி நேரத்தில் வாட்ஸ்–அப் புண்ணியத்தில் சிகாமணி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்தார். 16 ஆண்டுகள் கழித்து சிகாமணி வீடு திரும்பியது சுந்தரியின் குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிகாமணியை கட்டித்தழுவி அனைவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. 16 ஆண்டுகளாக தவித்த ஒரு தாயின் ஏக்கத்துக்கு 1 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த ‘‘வாட்ஸ்–அப்’’புக்கு ஒரு ராயல் சல்யூட்.
No comments:
Post a Comment