சென்னை, மார்ச்.23–
மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் மேயர் சைதை துரைசாமி பட்ஜெட் உரையை வாசித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபோஸ் (தி.மு.க.) எழுந்து நின்று, ‘இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு தேவையான அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை’ என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வெளிநடப்பு செய்தார்கள்.
மீண்டும் தி.மு.க. கவுன்சிலர்கள் அவைக்கு திரும்பிய போது மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினை குறை கூறும் வகையில் கருத்துக்கள் தெரிவித்தார். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
மன்றத்தின் நடுவே வந்து மேயருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் 3–வது முறையாகவும் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மக்கள் தேவைகளை நிறைவேற்றக்கூடிய எந்த அம்சங்களும் இல்லை. குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். குடிநிரில் கழிவுநீர் கலக்கிறது.
இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்கும் எந்த திட்டமும் இல்லை. தேவை இல்லாமல் மு.க.ஸ்டாலின் மீது தவறான குற்றச்சாட்டுகளை மேயர் பதிவு செய்கிறார். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக இது மக்கள் விரோத பட்ஜெட். இதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.’’ என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் தமிழ்செல்வனும் பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ‘மாநகராட்சி பட்ஜெட்டில் எந்த நல்ல அம்சங்களும் இல்லை’ என்றார்.
No comments:
Post a Comment