Thursday, 19 March 2015

கடலில் சுருக்கு வலை மீன் பிடிப்பு விவகாரம்: 3 மாதங்களில் முடிவு எடுக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மார்ச். 19–
சென்னை ஐகோர்ட்டில், மீனவர் செல்வம் உட்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
கடலில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதிதுள்ளது. இந்த சுருக்கு வலை கொண்டு மீன் பிடிக்கம்போது, மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி இறந்து விடுவதாகவும், இதனால், மீன் இன பெருக்கம் தடை படுவதாகவும் தமிழக அரசு தடை விதித்ததற்கு காரணம் கூறியுள்ளது.
இந்த சுருக்கு வலை தடை விதித்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோது, இதுகுறித்து ஆய்வு செய்து நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டு, சுருக்கு வலையின், அளவை பெரிதுப்படுத்தி, அதன் பின்னர் அந்த வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று கூறியுள்ளது.
எனவே, சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்து, ‘சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. எனவே, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் விதமாக தடை விதித்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே மத்திய அரசு வலையின் அளவை பெரிதாக்கி பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளதால், மனுதாரர்களின் கோரிக்கை குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment