சென்னை, மார்ச். 19–
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்லும் போது, சுங்க கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆனால், சாலைகளை சரியாக பராமரிப்பதில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் சம்பத் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதேபோல, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் எஸ்செல் உட்பட 3 நிறுவனங்கள், ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், அரசு பஸ்கள் சுங்கக் கட்டணத்தை நீண்டகாலமாக செலுத்தாமல், உள்ளது. இதனால், சாலைகளை முறையாக பராமரிக்க முடிவதில்லை’ என்று கூறியிருந்தது.
இந்த மனுக்கள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த பிப்ரவரி 3–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அரசு பஸ்கள், சுங்கச்சாலையை பயன்படுத்துவதற்கு செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், சுங்கச்சாலைகளை பயன் படுத்த அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘சுங்க கட்டணம் பாக்கித் தொகை ரூ.1.72 கோடிக்கான 5 காசோலைகளை தனியார் சுங்க கட்டண வசூலிக்கும் நிறுவனத்துக்கு வழங்கினார். இதையடுத்து, வழக்கை வருகிற ஏப்ரல் 24–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்.
இதன்பின்னர், அரசு தரப்பில் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, ‘நஷ்டத்தில் இயங்குவதாக இருந்தால், போக்குவரத்து கழகங்களை இழுத்து மூட வேண்டியதுதானே’ என்று கருத்து தெரிவித்தார். மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இதுவரை எத்தனை பஸ்கள் ஜப்தி உத்தரவுக்கு உள்ளானது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அட்வகேட் ஜெனரல் 700 பஸ்கள் என்று கூறினார்
No comments:
Post a Comment