சென்னை, மார்ச். 25–
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி ஆண்டு விழா நேற்று நடை பெறுவதாக இருந்தது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
விழாவில் கலந்து கொள்ள அவர் வேளச்சேரியில் இருந்து புறப்பட தயாரானார். அதற்குள் போலீஸ் அதிகாரிகள் அவரை சந்தித்து விடுதி விழாவில் தாங்கள் பங்கேற்க கூடாது. விடுதிக்கு வெளியே வேண்டுமானால் நிகழ்ச்சியை நடத்தி கொள்ளுங்கள் என்று கூறினர்.
போலீஸ் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து எழுத்துப் பூர்வமாக அனுமதி மறுப்பு ஆணை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ரத்து செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தொண்டர்கள், விடுதி மாணவர்கள் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கோர்ட்டு அனுமதிப் பெற்று விழாவில் கலந்து கொள்வது என திருமாவளவன் முடிவு செய்தார்.
விடுதி விழாவில் பங்கேற்க கூடாது என போலீஸ் தனக்கு தடை விதித்து இருப்பதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாணவர் விடுதியில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஆண்டு விழாவில் நான் பங்கேற்கக்கூடாது என திடீரென அரசு தடை விதித்துள்ளது. நூற்றுக் கணக்கான காவலர்களை இறக்கி விடுதி மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது காவல்துறை.
அத்துடன், வேளச்சேரியில் நான் தங்கியுள்ள அலுவலகத்தைச் சுற்றிலும் நூற்றுகணக்கான காவல் துறையினரை இறக்கி வெளியில் செல்ல விடாமல் முற்றுகையிட்டனர். காவல் துறையின் உயர் அதிகாரிகள் நேரிலே வந்து அவ்விழாவில் பங்கேற்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுப்பு ஆணை வழங்கினர்.
மாணவர்கள் விடுதியில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என ஆதிதிராவிட நலத்துறையைச் சோர்ந்த அதிகாரிகள் காவல் துறைக்கு அறிவிப்புச் செய்ததையடுத்து இவ்வாறு தடைவிதிக்கப்பட்டதாக கூறினார்கள்.
அரசியல் கட்சித் தலைவர்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள், விடுதிகளின் ஆண்டு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கமான நடைமுறையே ஆகும். விக்டோரியா மாணவர் விடுதியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுங்கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டுள்ளனர். ஆளுங்கட்சியினர் பங்கேற்பதற்கு தடைவிதிக்காத அரசு, அல்லது காவல்துறை எனக்கு மட்டும் தடைவிதித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்வே காரணமாகும்.
இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் கொடூரமான செயலாகும்.
10–ந்தேதி வில்லிவாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும், 18–ந்தேதி கோடம்பாக்கம் விடுதி ஆண்டு விழாவிலும், 23–ந்தேதி ராயபுரம் முதுகலை மாணவர் விடுதி ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் அவ்விழாக்கள் நடந்தேறின. எம்.சி.ராசா விடுதியின் பழைய மாணவர் என்கிற முறையில் எனக்கு மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று அதில் பங்கேற்க ஒப்புதல் அளித்தேன். ஆனால், அரசு இதற்குத் தடைவிதித்திருப்பது இதற்கு முன் யாருக்கும் நடந்திராத நிகழ்வாகும்.
அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கையும் மாணவர்களின் உரிமையைப் பறித்த அடக்குமுறையையும் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். நீதிமன்றத்தை அணுகி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்
No comments:
Post a Comment