Monday, 9 March 2015

ஆலந்தூர் சுரங்கப்பாதை மாநகராட்சி டெண்டர் விட்டது எப்போது?: மா.சுப்பிரமணியம் கேள்வி

சென்னை, மார்ச். 9–ஆலந்தூர் சுரங்கப்பாதை மாநகராட்சி டெண்டர் விட்டது எப்போது?: மா.சுப்பிரமணியம் கேள்வி
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான மா. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆதம்பாக்கத்தையும், ஆலந்தூரையும் இணைக்கும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை சென்னை மேயர் சைதை துரைசாமி 23.02.14 அன்று துவக்கும் வகையில் கடப்பாறையை கையில் தாங்கிய புகைப்படம் ஒன்று அப்போது வெளிவந்தது.
நாடாளுமன்ற மற்றும் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அப்பகுதி மக்களின் வாக்குகளை ஏமாற்றி பெறவே மேற்கண்ட பணி துவங்கும் நிகழ்ச்சி என்பது தெரிந்ததற்கு பிறகு கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் அறிவுரையின்படி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தின் முன்னால் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி 6.3.15 அன்று ஐந்தாயிரம் பேர் கைதானோம்.
பணி துவங்கப்படுவதாக அறிவித்து ஒரு வருடத்தை கடந்தும் இன்னமும் எவ்வேலையும் நடக்கவில்லையே என்பது தான் நமது பிரதான குற்றச்சாட்டு.
அதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று மாநகராட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மாநகராட்சியின் சார்பில் ரெயில்வே துறைக்கு இரண்டு கோடியே இருபத்தாறு லட்சத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், ரெயில்வே நிர்வாகத்திற்கு ஒப்பந்தம் விட்டு பணி ஆணை வழங்கி விட்டதாகவும், அதன் பிறகு மேயர் அடிக்கல் நாட்டியதாகவும், பிறகு ரெயில்வே துறை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும், தொடர்ந்து பல முறை ஒப்பந்தங்கள் கோரப்பட்டும் யாரும் அப்பணியை எடுக்க முன் வரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தையும் மேயர் துரைசாமியையும் நாம் கேட்க விரும்புவது...
* இதுவரை மாநகராட்சியும் ரெயில்வே நிர்வாகமும் இணைந்து செய்யும் பணிகளுக்கு தனித்தனியே அவரவர் வேலைகளுக்கு ஏற்ப டெண்டர் விடப்பட்டு வந்ததே..
இப்போது மட்டும் ஏன் ரயில்வேயிடம் மாநகராட்சி பணத்தை கொடுத்தது?
* ரெயில்வே நிர்வாகம் டெண்டர் விட்டு பணி ஆணை வழங்கப்பட்டது என்றால் டெண்டர் எப்போது விடப்பட்டது?
எந்தெந்த பத்திரிகைகளில் அதற்கான விளம்பரம் வந்தது?
* ரெயில்வே நிர்வாகம் டெண்டர் விட்ட பணி தொடக்க நிகழ்வில் எந்தெந்த ரெயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்?
* என்ன காரணத்துக்காக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
* தொடர்ந்து பலமுறை டெண்டர் விடப்பட்டும் யாரும் எடுக்க முன் வரவில்லை என்று சொல்லும் மாநகராட்சியே எப்போதெல்லாம் டெண்டர் விடப்பட்டுள்ளது?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வது தானே நியாயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment