Thursday, 19 March 2015

மோகன்ராஜுலு மாற்றம்: பா.ஜனதா அமைப்பு செயலாளராக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி நியமனம்

சென்னை, மார்ச். 19–
பா.ஜனதா கட்சியின் அமைப்பு செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பதவியில் பெரும்பாலும் அனுபவம் வாய்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளே நியமிக்கப்படுவார்கள்.
கட்சி தலைவர்களிடையே கருத்துவேறுபாடு, கோஷ்டி பூசல் ஆகியவற்றை களைதல், கூட்டணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான பணிகளை அமைப்பு செயலாளராக இருப்பவர் அனைவரையும் அரவணைத்து செய்து முடிப்பார். எனவே இந்த பதவிக்கு பெரும்பாலும் தன்னலமற்று சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளே நியமிக்கப்படுவார்கள். இதுவரை தமிழக பா.ஜனதா அமைப்பு செயலாளராக மோகன் ராஜுலு செயல்பட்டு வந்தார். இப்போது அந்த பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய அமைப்பு செயலாளராக கேசவ விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் வெளியிடப்பட்டது.
கேசவ விநாயகம் முழுநேர ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி. தற்போது தென் தமிழகத்தின் பிரசாரகராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதி ஆகும்.

No comments:

Post a Comment