இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை!
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வழக்கறிஞர் பாலு உரை
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 25 ஆவது கூட்டத்தில் பசுமைத்
தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர. அருள், வழக்கறிஞர் பாலு, சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், பசுமைத்தாயகம் அமைப்பின்
நிர்வாகி கணல் கண்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தின் இன்றைய
அமர்வில், இந்திய நேரப்படி மாலை 4.30
மணிக்கு இலங்கையில் இனவாதம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் க. பாலு உரையாற்றினார்.
அவரது உரை விவரம் வருமாறு: இலங்கையில் மதச்
சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது குறித்து பசுமைத்தாயகம் அமைப்பு அதன்
ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை பல இன, மதக் குழுக்களின் தாயகம்
ஆகும். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட நாடு
என்ற போதிலும்,
அதிகரித்து
வரும் சிங்கள தேசியவாதப் போக்கு காரணமாக, புத்தமதத்தைச் சாராத சமுதாயங்கள் மீது குறிப்பாக ஹிந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களைக்
கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்து
வருகிறது.
இலங்கையில் சமரசம் மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா.
மனித உரிமை ஆணையர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சிங்கள தேசியவாதப்
பிரிவுகளால் மற்ற மதப்பிரிவினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க
அளவில் அதிகரித்து வருவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தடுக்க
நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அரசுக்கு மனித உரிமை ஆணையர் மீண்டும், மீண்டும் விடுக்கும் வேண்டுகோள்கள்
இன்று வரை கண்டுகொள்ளப்படவில்லை.
2013 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள், அவர்கள் வழிபடும் மசூதிகள், அவர்களுக்கு சொந்தமான தொழில்
நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள், வன்முறைகள், அச்சுறுத்தல்கள் என 280 நிகழ்வுகள் நடந்திருப்பதாக இஸ்லாமிய தொண்டு
நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 300 ஆண்டுகள் பழமையான அனுராதபுரம் மசூதியை புத்த மத
துறவிகள் தாக்கினார்கள். அதேபோல், மாத்தளை நகரில் உள்ள மசூதி முன்பாக திரண்ட 2000 பேர் கொண்ட கும்பல், சிங்கள நாட்டில் இஸ்லாமிய
மசூதி இருப்பது சட்டவிரோதம் என்று கூறி வன்முறையில் ஈடுபட்டதால், அங்கு நடைபெற்ற தொழுகை
பாதிக்கப்பட்டது. அந்த மசூதி மாத்தளையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும்
போதிலும், அம்மசூதியை வேறு இடத்திற்கு
மாற்ற வேண்டும் என்று இலங்கை மத விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது.
இத்தகைய பல நிகழ்வுகளில் புத்தமத துறவிகள் பங்கேற்றதையும், அந்த வன்முறைகளை தடுக்க எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதையும் கண்ணால் கண்ட
சாட்சிகள் விளக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன
.
அதேபோல், கிறித்தவர்கள் மீதும் , கிறித்தவ தேவாலயங்கள் மீதும்
103க்கும் அதிக முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக கிறித்தவ மத குழுக்கள்
கூறியுள்ளன.
அரசின் செயல்பாடற்ற தன்மையால் துணிச்சல் அடைந்த பொதுபல சேனா எனப்படும்
தீவிரவாத புத்தமத துறவிகள் அமைப்பினர், வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசினர்; அதுமட்டுமின்றி, புத்தமதம் தான் சிறந்த மதம்
என்றும் வலியுறுத்தத் தொடங்கினர். இலங்கை அதிபரின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான
கோத்தபாய இராஜபக்சே அண்மையில் ஆற்றிய உரையில், இலங்கைக்கு பொதுபல சேனா அமைப்பு ஆற்றிவரும் பணிகள்
பாராட்டத்தக்கவை என்று கூறியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த இலங்கை இன அழிப்புப் போர் முடிவடைந்து 5
ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன& மத சகிப்புத்தன்மையின்றி அதிகரித்து வரும் வன்முறைகள்
அனைத்துமே இலங்கைப் போருக்கான பொறுப்புடைமையை நிர்ணயித்து தவறு செய்தவர்களை
தண்டிப்பதற்கு இலங்கை அரசுக்கு அரசியல் துணிச்சல் இல்லாததால் ஏற்பட்ட நேரடி
விளைவுகள் ஆகும். அதுமட்டுமின்றி, தமிழர்களின் அடையாளம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றை
திட்டமிட்டு அழிப்பதற்கான அடையாளமாகவும் இந்த வன்முறைகள் திகழ்கின்றன.
பேரவையின் தலைவர் அவர்களே! இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த வன்முறைகள், இப்போது நடைபெறும் வன்முறைகள்
ஆகியவை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்
என்ற மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை பசுமைத்தாயகம் அமைப்பு வலிமையாக
ஆதரிக்கிறது. இலங்கையில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை சுதந்திரத்தை
நிலை நிறுத்தவும், அங்கு நடைபெறும் தீமைகளை முடிவுக்கு கொண்டுவரவும் மனித உரிமை பேரவை நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
No comments:
Post a Comment