Monday, 23 March 2015

சுகாதாரத்துறை அதிகாரி கொலைக்கு ஆதாரம் உள்ளது: இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 23–
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் சேப்பாக்கத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்தும் மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பட்டன.
அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது:–
ஏழைகளையும், விவசாயிகளையும் வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு, செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடியின் முகமூடி கிழிந்து வருகிறது.
பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில்தான் இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளது. சாதாரண உயரத்தில் இருந்த மோடி இந்த உயரத்துக்கு வந்தது காங்கிரஸ் வாங்கி தந்த சுதந்திரமும், ஜனநாயகமும் தான் என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழக அரசும் இந்த சட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறது. நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். உங்களுக்காக எத்தனையோ பேர் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் நிலத்தை பிடுங்குவதற்கு நீங்கள் உதவலாமா?
நெல்லையில் ஒரு நேர்மையான அதிகாரி மரணத்துக்கு ஒரு அமைச்சர் காரணமாக இருந்தார். அடுத்ததாக சுகாதாரத்துறை அதிகாரி தற்கொலை செய்ததாக கூறினார்கள். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் உள்ளது. இல்லையென்றால் என் மீது வழக்கு போடுங்கள். கைது செய்யுங்கள்.
அதிகாரி அறிவொளி கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களை காப்பாற்றும் கடமை நமக்கு உள்ளது.
வருகிற 28–ந்தேதி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் காங்கிரஸ் முழுமையாக பங்கேற்கும். கர்நாடகத்தில் ஆளுவது காங்கிரசாக இருந்தாலும் காவிரியில் தடுப்பணை கட்டுவதை கடுமையாக எதிர்ப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, மாவட்ட பொருளாளர் தி.நகர் ஸ்ரீராம், மகளிர் அணி தலைவி சாய்லட்சுமி, செயலாளர் சாந்த ஸ்ரீனி, நிர்வாகிகள் கடல்தமிழ், மயிலை அசோக், துறைமுகம் ரவிராஜ், தமிழ்செல்வன், நாச்சிகுளம் சரவணன், வக்கீல் சுதா, சித்ராகிருஷ்ணன், நிலவன், சூளை ராஜேந்திரன், சரஸ்வதி நாலடியார், கனிபாண்டியன், அகரம் கோபி, புல்லட் சாகுல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

No comments:

Post a Comment