Wednesday, 25 March 2015

தமிழக பட்ஜெட் தாக்கல்: புதிய வரிகள் இல்லை - செல்போன் வரி குறைப்பு

சென்னை, மார்ச். 25–

தமிழக சட்டசபையில் 2015–2016–க்கான பட்ஜெட்டை முதல்– அமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

புதிய பட்ஜெட்டில் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

நிதிச்சுமை உயர்ந்துள்ள இந்த நிலையிலும் மாநிலத்தின் சொந்த வரிவருவாயில் குறைந்த வளர்ச்சியே உள்ள போதும், புரட்சித் தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின்படி புதிய வரிகள் எதனையும் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்காக சில முக்கிய வரிச் சலுகைகளை வழங்கவும் இந்த அரசு முன் வந்துள்ளது. இதன்படி பின்வரும் வரிவிகித மாற்றங்களை நமது அரசு செயல்படுத்தும்.

* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி அலகுகளோடு சிறப்பாகப் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006 பிரிவு 19 (2) (வி)ன் கீழ் கொண்டுவரப்பட்ட காப்புரையின்படி 11.11.2013 முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திருப்பம் திரும்பப் பெறப்படும்.

* ‘சி’ படிவமின்றி நடைபெறும், மாநிலங்களுக்கு இடையேயான பொருள் விற்பனைகளிலும் உள்ளீட்டு வரி வரவை வணிகர்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக, 2006–ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் பிரிவு 19(5)–ன் கீழ்வரும் கூறான (சி)–ஆனது இனிமேல் விலக்கிக் கொள்ளப்படும். இந்த நடவடிக்கையினால் ‘சி’ படிவமின்றி பொருட்களின் மீதான மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையினை மேற்கொள்ளும் வணிகர்களது கூடுதல் சுமை தவிர்க்கப்படும்.

* மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள் மற்றும் மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

* அனைத்து வகையான கொசு வலைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

* நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

* ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.

* மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* மாநிலத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரை ஊக்குவிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை பயக்கவும், காற்றழுத்த கருவிகள், 10 குதிரைத்திறன் வரையிலான மோட்டார் பம்புகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி, 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* கைபேசிகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.

மேற்காணும் வரிச்சலுகைகள் மூலமாக அரசிற்கு ஆண்டொன்றுக்கு 650 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

மேற்கூறிய அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு 2015–2016 ஆண்டிற்கான வருவாய் வரவு மதிப்பீடுகளை பேரவையின் முன் வைக்கிறேன். வணிகவரி வசூல் 2015–2016–ம் ஆண்டிற்கு 72,068.40 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்றே, முத்திரைத் தாள் மற்றும் பத்திரப்பதிவின் மூலம் கிடைக்கும் வருவாய் 10,385.29 கோடி ரூபாய் அளவிலும், ஆயத்தீர்வை மூலம் கிடைக்கும் வருவாய் 7,296.66 கோடி ரூபாய் அளவிலும், வாகனங்கள் மீதான வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் 4,882.53 கோடி ரூபாய் அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, 2014– 2015–ம் ஆண்டு கணிக்கப்பட்டுள்ள அளவை விட 12.02 சதவீத அளவில் மட்டுமே வரி வருவாய் வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளதால், வரும் நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 96,083.14 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு 21,149.89 கோடி ரூபாய் எனவும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் மானிய உதவி 16,376.79 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறு 2015–2016–ம் ஆண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் 1,42,681.33 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக வரிகள் எவற்றையும் உயர்த்தாமல், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், வரி வசூல் அமைப்பை முடுக்கிவிட்டும் மேற்கூறிய வருவாய் இலக்குகளை இந்த அரசு எட்டும்.

No comments:

Post a Comment