சென்னை, மார்ச் 23-
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்த போது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–
மாநகராட்சி பொறுப்பை நான் ஏற்றபிறகு இதுவரை மக்கள் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.18,222.37 கோடி. கடந்த 3 நிதி ஆண்டுகளில் அரசு வழங்கிய நிதியையும், அம்மா வழங்கிய சிறப்பு நிதி மற்றும் மாநகராட்சி வருவாயை கொண்டு மாநகராட்சி செய்துள்ள பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி மக்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்களை மறைத்து விட்டு மக்கள் பணியாற்றும் சென்னை மாநகராட்சியை பார்த்து, தி.மு.க.வினர் செய்த பணிகளை போல, அவர்கள் செயல்பட்டதை போல நாங்கள் செயல்படவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அறிக்கை விடுகிறார்கள்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் தங்கள் சுயநலத்துக்காக மட்டுமே மாநகராட்சி பணிகளை செய்தார்கள். அவர்களுக்கு நம்மை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை.
1996 முதல் 2001 வரை சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் அளித்த பட்ஜெட்டில் 159 அறிவிப்புகள் மட்டுமே இருந்தன. அதில் நிறைவேற்றப்பட்டது வெறும் 60 மட்டும்தான்.
2006 முதல் 2011 வரை தி.மு.க. மேயர் அறிவித்த அறிவிப்புகள் 606. அதில் நிறைவேற்றப்பட்டவை 253 மட்டுமே.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் 419 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதில் 218 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பணி முடிக்கப்பட்டுள்ளவை 52.3 சதவீதம்.
165 பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. சென்னை மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த நிதி ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment