சென்னை, மார்ச். 19–
சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. வீராணம் ஏரியும் கை கொடுக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே நாளில் பூண்டி ஏரியில் 232 மில்லியன் கனடி தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இன்றைய நிலவரப்படி 171 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் முறையாக வராததாலும் பூண்டி ஏரி வரலாறு காணாத அளவு வறண்டு காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் புழல் ஏரியில் 2 ஆயிரத்து 272 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு ஆயிரத்து 682 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு 820 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 879 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
சோழவரம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 72 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 47.23 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருக்கிறது.
கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் சேர்ந்து இதே நாளில் மொத்தம் 3 ஆயிரத்து 396 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்று 2 ஆயிரத்து 802 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு உள்ளது.
இன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் வரத்து 30 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து கோடை காலம் முழுவதும் 3 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும். வழக்கமாக அவர்கள் முழுமையாக தண்ணீர் தருவது இல்லை. இதுவரை 1.3 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது.
இன்னும் 1.7 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும் கடந்த மாதம் தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் கிருஷ்ணா தண்ணீர் குறித்து ஆந்திராவில் பேச்சுவார்த்தை நடந்தது. என்றாலும் கிருஷணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா தண்ணீர் மீண்டும் ஏப்ரல் 1–ந்தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வீராணம் ஏரி தண்ணீர் சென்னைக்கு தொடர்ந்து வருகிறது. வீராணம் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment