Wednesday, 4 March 2015

மானியம் இல்லாத சிலிண்டர் இந்த மாதம் நிறுத்தப்படவில்லை: அதிகாரி தகவல்

சென்னை, மார்ச். 4–
மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டம் கடந்த ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 1.53 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளன. இன்றைய நிலவரப்படி சுமார் 1.25 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். சுமார் 16 சதவீத வாடிக்கையாளர்கள் இதுவரை நேரடி மானிய திட்டத்தில் இணையவில்லை.
நேரடி மானிய திட்டத்தில் இணைய மார்ச் 31–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கெடுவுக்குள் மானிய திட்டத்தில் இணைபவர்களுக்கு முன் வைப்புத் தொகை ரூ. 568–ம் அந்தந்த மாதத்துக்கான மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் பெற விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் கிடைக்கும்.
இந்த நிலையில் நேரடி மானிய திட்டத்தில் இது வரை இணையாமல் சிலிண்டருக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:–
நேரடி மானிய திட்டத்தில் சேராதவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் முன்பதிவு ரத்து செய்யப்படவில்லை. முன்பதிவு ரத்து என்பது தவறான தகவல்.
தமிழகத்தில் இதுவரை 84 சதவீதம் பேர் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே இன்னும் நேரடி மானிய திட்டத்தில் சேரவில்லை. அவர்களுக்கு வருகிற 31–ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
தற்போது நேரடி மானிய திட்டத்தில் இணைந்தவர்களுக்கு சிலிண்டர் ரூ. 600–க்கு விற்கப்படுகிறது.
மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ரூ. 400–க்கு விற்கப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு மானிய தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தற்போது ரூ. 600 விலை கொண்ட சிலிண்டர் 3 மடங்கும், ரூ. 400 விலை கொண்ட சிலிண்டர் 1 மடங்கும் மட்டுமே முகவர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் மானிய திட்டத்தில் இணையாவதர்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் முன்பதிவு ஏதும் ரத்து செய்யப்படவில்லை.
சிலிண்டர் தாமதமானதை காரணம் காட்டி அது ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல் பரபரப்படுகிறது. உண்மையிலேயே யாருக்கும் சிலிண்டர் முன்பதிவு ரத்து செய்யப்படவில்லை.
ஏப்ரல் 1–ந் தேதிக்கு பிறகு ரூ.400 விலை கொண்ட சிலிண்டர் சப்ளை செய்யப்படாது. அதன் பிறகு நேரடி மானியதிட்டத்தில் இணைந்தவர்களுக்கும், இணையாதவர்க்கும் ரூ. 600 மதிப்புள்ள சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும். அதன்பிறகு சிலிண்டர் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்படாது. அனைவருக்கும் சீராக ஒரே விலையில் சிலிண்டர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.மானியம் இல்லாத சிலிண்டர் இந்த மாதம் நிறுத்தப்படவில்லை: அதிகாரி தகவல்

No comments:

Post a Comment