Monday, 9 March 2015

போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தக்கோரி வழக்கு: ஐ.ஜி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, மார்ச். 9–போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தக்கோரி வழக்கு: ஐ.ஜி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பிரகாஷ்ராஜ் மற்றும் பாடம் நாராயணன் ஆகியோர் தனித்தனியாக பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட முஸ்லிம் வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்துள்ளார். இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நடைபெறுகிறது.
எனவே, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவுக்கு தமிழக அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்து விட்டது. இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை நிர்வாக ஐ.ஜி. ஒரு புதிய பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், 251 போலீஸ் நிலையங்களில் மட்டும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளதாக’ கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த புதிய பதில் மனுவில், கூடுதலாக விவரங்கள் எதுவும் இல்லை. போலீஸ் நிலையங்களில் எங்கெங்கு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது? எவ்வளவு நாட்களுக்குள் இந்த பணி முடிவடையும் உள்ளிட்ட எந்த ஒரு விவரங்களும் இல்லை. எனவே, இந்த விவரங்களை கொண்ட புதிய பதில் மனுவை ஐ.ஜி. (நிர்வாகம்) நேரில் ஆஜராகி தாக்கல் செய்யவேண்டும். மேலும், இந்த வழக்கை ஏப்ரல் 24-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நிர்வாகப்பிரிவு ஐ.ஜி. செயல்படவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள்.

No comments:

Post a Comment