சேலம், ஏப். 9–
திருப்பதி காட்டுக்குள் கொல்லப்பட்ட 20 தமிழர்களும் போலீசாருடன் நடந்த மோதலில் செத்தார்களா அல்லது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகம் நீடித்தபடி உள்ளது.
20 பேரின் உடலும் நேற்று பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து உடல்கள் திருப்பதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருந்து திருப்பதி காட்டுப் பகுதிக்கு செம்மரம் வெட்ட சென்ற மேலும் பல தமிழர்கள் என்ன ஆனார்கள் என்ற பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் துப்பாக்கியால் சுடத் தொடங்கிய போது சுமார் 80 தொழிலாளர்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை சிறு விமானம் மூலம் தேடுவதாகவும் ஆந்திர போலீசார் கூறி இருந்தனர்.
அப்படி தப்பிச் சென்ற 80 தமிழர்களும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் கதி என்ன ஆனது? என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர்களில் 46 பேர் சேலம் – நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த 46 பேரையும் செம்மர கடத்தல் ஏஜெண்டு ஒருவர் கடந்த வாரம் திருப்பதி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. திருப்பதி காட்டுக்குள் செம்மரம் வெட்ட 46 பேரும் நுழைந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவர்கள் ஆந்திர மாநில போலீசாரின் வளையத்துக்குள் சிக்கிக் கொண்டனர். 46 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து சுட்டதாக தெரிகிறது. இதில் 46 பேரும் நாலா புறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்படி ஓடியவர்களில் 5 பேரை போலீசார் பிடித்தனர்.
அந்த சமயத்தில் சதீஷ் (வயது 30) என்பவர் மட்டும் எப்படியோ போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி வந்துவிட்டார். சேலம் மாவட்டம் பேளூரை அடுத்த தாண்டனூர் பகுதியைச் சேர்ந்த இவர் ஆந்திர போலீசாரிடம் இருந்து தப்பியது எப்படி என்பது பற்றி இன்று ‘‘மாலைமலர்’’ நிருபரிடம் கூறியதாவது:–
கடந்த மாதம் 31–ந் தேதி ஆந்திராவுக்கு 46 பேர் சென்றோம். இதில் 5 பேரை ஆந்திர போலீசார் கைது செய்து கடப்பா சிறையில் அடைத்து உள்ளனர். நான் தப்பி வந்து விட்டேன். மற்ற 40 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை ஆந்திர போலீசார் பிடித்து வைத்து உள்ளார்களா? அல்லது தப்பி விட்டார்களா என்று தெரியவில்லை.
ஆந்திர போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய போது நான் முள் காட்டில் பதுங்கி கொண்டேன். போலீசார் அங்கு இருந்து சென்ற பிறகு நான் தப்பித்து வந்து விட்டேன். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பேளுரைச் சேர்ந்த ஒருவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவரது கதி என்ன என்றும் தெரியவில்லை.
மாயமாகி உள்ள 40 பேரில் பலர் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளுர், நீர்முள்ளிக்குட்டை, அறுநூத்துமலை, வெள்ளாளப்பட்டி, கருமந்துறை, தாண்டானூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகே உள்ள ஒண்டிக்கடை, காட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
40 பேர் கதிஎன்ன? என்பது தெரியாததால் அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதற்டையில் கடப்பா சிறையில் உள்ள 5 தமிழர்களை அவர்களது உறவினர்கள் போய் பார்த்து வந்து உள்ளனர்.
அவர்களை ஜாமீனில் எடுக்கவும், அபராத பணம் கட்டவும் ரூ. 1 லட்சம் வரை செலவாகும் என்பதால் உறவினர்கள் சொந்த ஊருக்கு வந்து விட்டனர். பணத்தை புரட்டி கொண்டு மீண்டும் அவர்கள் கடப்பா செல்ல உள்ளனர்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறியதாவது:–
கூலி வேலைக்கு அழைத்து சென்ற தாண்டானூரை சேர்ந்த 3 பேர் கடப்பா சிறையில் உள்ளனர். இவர்கள் எங்கே என்று நாங்கள் தேடி வந்தோம். இப்போது இவர்கள் கடப்பா சிறையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை ஜாமீனில் எடுக்க அதிகம் செலவு ஆகும் என தெரிகிறது.
இந்த தொகையை மலைக்கிராம மக்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஜாமீன் எடுக்க இருக்கிறோம். கடப்பா சிறையில் உள்ள தமிழர்களை ஜாமீனில் எடுக்க தமிழக அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
"
No comments:
Post a Comment