Thursday, 9 April 2015

ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த அதிகாரிகள் திருப்தி

சென்னை, ஏப். 9–ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த அதிகாரிகள் திருப்தி
சென்னையில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரூ.200 கோடியில் 7 தளங்களுடன் 7 கட்டிடங்கள் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.
இந்த கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்கு கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள், விடுதி வசதி, டாக்டர்கள் மற்றும் நர்சு குடியிருப்பு போன்ற அடிப்படையான வசதிகள் செய்யப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு வகுப்பறை, ஆடிட்டோரியம், கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து இருந்தால்தான் அனுமதி கிடைக்கும்.
டெல்லியில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஏற்கனவே ஒரு முறை இந்த மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்து விட்டு மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர்.
இந்த நிலையில் புதிய மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ. அதிகாரிகள் 3 பேர் நேற்று இறுதி கட்ட ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
அவர்கள் புதிய ஆஸ்பத்திரியின் இறுதி கட்ட பணியை பார்த்து வியப்படைந்தனர். தனியார் மருத்துவ கல்லூரியை விட இந்த புதிய மருத்துவ கல்லூரியில் வசதிகள் அமைந்துள்ளன.
அனைத்து கட்டமைப்பு வசதிகளும் முழு நிறைவாக திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்லி அதிகாரிகள், அனைத்தும் நிறைவாக இருப்பதாக கூறியதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.மாணவர் சேர்க்கையில் இந்த புதிய மருத்துவ கல்லூரி இடம் பெறுவது உறுதியாகி விட்டது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் 100 இடங்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. மே 15–ந் தேதிக்கு பிறகு இதற்கான அனுமதியை எம்.சி.ஐ.வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.
மேலும் திருவாரூர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளுக்கு முழு அங்கீகார அனுமதி இந்த ஆண்டு கிடைத்து விட்டது. திருச்சி, செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி, ஸ்டான்லி ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதலாக இடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கான இந்த வருட அனுமதி எம்.சி.ஐ. விரைவில் வழங்க உள்ளது.
எனவே எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு சேர விரும்பும் மாணவ–மாணவிகளுக்கு ஓமந்தூரார் புதிய மருத்துவக் கல்லூரி ஒரு ‘ஜாக்பாட்’ ஆகும்.

No comments:

Post a Comment