சென்னை, மே. 9–
பொதுப் பணித்துறையில் பணியாற்றும் என்ஜினீயர்கள் சிலர் லஞ்சம் கேட்பதாகவும், பணிகளுக்கு கூடுதல் கமிஷன் கேட்பதாகவும் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் புகார் கூறி வந்தனர்.
இது தொடர்பான ரகசிய உரையாடல் ‘வாட்ஸ் அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காண்டிராக்டர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அழைத்து பேச இருப்பதாக சங்கத்தின் தலைவர் குணமணி நிருபர்களிடம் தெரிவித்தார். ஆனால் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதிகாரிகள் தரப்பில் 2 நாள் கால அவகாசம் கேட்டு இருப்பதால் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே சங்க தலைவர் குணமணி தலைமையில் காண்டிராக்டர்கள் இன்று அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்றனர். அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தங்களிடம் லஞ்சம் மற்றும் கூடுதல் கமிஷன் கேட்பதாக புகார் கூறினார்கள்.
மேலும் லஞ்சம் கேட்கும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் 10 பேரின் பெயர் விவரங்கள் கொண்ட பட்டியலையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்தனர்.
பின்னர் அந்த பட்டியலை நிருபர்களிடமும் குணமணி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–
பொதுப் பணித்துறையில் லஞ்சம் வாங்கும் 10 அதிகாரிகள் பட்டியலை லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்து புகார் செய்து இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் சங்கத்தில் 14,000 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். சென்னையில் கட்டிடம் கட்டுமானப்பணியில் ஈடுபடுவோர், கட்டிடம் இடிப்பவர்கள் என 500–க்கும் மேற்பட்ட காண்டிராக்டர்கள் உள்ளனர்.
கட்டுமான பணிகளை பெற அதிகாரிகளுக்கு 10 சதவீதம் கமிஷனும் என்ஜினீயர்களுக்கு 5 சதவீதம் கமிஷனும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது என்ஜினீயர்கள் இரு மடங்கு உயர்த்தி 10 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். மேலும் அவர்கள் விரும்பும் காண்டிராக்டர்களுக்குத்தான் பணிகள் வழங்கப்படுகிறது. எனவே டெண்டர் முறையில்தான் பணிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்பட 20 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
பொதுப்பணித்துறையில் தொடர்ந்து லஞ்சம் வாங்கும் 33 அதிகாரிகள் பட்டியலை வைத்து இருக்கிறோம். இளநிலை பொறியாளர் முதல், கண்காணிப்பு பொறியாளர் வரை இதில் உள்ளனர். இவர்களை தனித்தனியாக 3 பட்டியலாக தயாரித்து இருக்கிறோம். முதல் கட்டமாக 10 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
இதில் ரூ.30 கோடி வரை ஊழல் நடந்து இருக்கிறது. பினாமிகள் பெயர்களில் காண்டிராக்ட் கொடுக்கிறார்கள். வேலை செய்யாமலே வேலை செய்ததாக பில் போட்டு முறைகேடு செய்கிறார்கள். இவற்றை புகாரில் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment