சென்னை, மார்ச். 19–
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
16.01.2015 அன்று ரெயில்வே மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே பட்ஜெட்டில், ரெயில்வே மேம்பாலம் அமைத்திட ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக 06.03.2015 அன்று வில்லிவாக்கம் ஆய்வுப் பணியின் போதும், 18.03.2015 அன்று கொளத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் மு.க. ஸ்டாலின் பேசி உள்ளார்.
இச்செய்தி குறித்து, சென்னை மாநகராட்சி உண்மைத்தன்மையை பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக கீழ்க்கண்ட நிகழ்வுகளை தேதி வாரியாக தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா தமிழக முதல்வராக இருந்த போது, அம்மாவின் ஆணையின்படி, பொது மக்களின் வசதிக்காக கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண். எல்.சி.1–ல் மேம்பாலம் அமைக்க 30.04.2003 அன்று சென்னை மாநகராட்சி மன்ற தீர்மான எண். 220/2003 மூலம் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, மதிப்பீடு தயாரிக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேற்கண்ட பணியை தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம், திருவாளர்கள் ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ்–க்கு 12.04.2004 அன்று வழங்கியது.
அதன்பிறகு, புரட்சித்தலைவி அம்மாவின் உத்தரவின்படி 30.06.2004 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 50:50 செலவு பகிர்வு முறையில் கொளத்தூர் வில்லிவாக்கம் சந்திக்கடவு எண். எல்.சி.1ல் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ரெயில்வே துறையைக் கேட்டுக்கொண்டது.
இதன் அடிப்படையில் 2005-2006ல் தென்னக ரெயில்வேயில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணி சேர்க்கப்பட்டது.
பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ் அளித்த பணியிட வரைபடம் சாத்தியக்கூறு இல்லாத வகையில் கைவிடப்பட்டது.
திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் இத்திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா ஆணையின் படி, சென்னை மாநகராட்சி 2012–2013 நிதிநிலை அறிக்கையில் இப்பணி மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வரும் பணிகள் பற்றிய விவரம்:–
* 18.04.2012 அன்று தமிழ்நாடு நகர்ப்புற முன் கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கலந்தறிதற்குரிய வரை நியமிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
* இப்பணியை விரைந்து மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்துக்கு 04.05.2012, 18.09.2012 நினைவூட்டு கடிதம் அனுப்பியது.
* 17.10.2012 அன்று தங்களிடம் நிதி ஆதாரம் தற்போது இல்லாததால் கலந்தறிதற்குரியவர் பணியை சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தமிழ்நாடு நகர்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டது.
* மன்ற தீர்மான எண்.122/2013 நாள் 22.02.2013 மூலம் சென்னை மாநகராட்சி நிதியில் கலந்தறிதற்குரியவரை தெரிவு செய்து தர தமிழ்நாடு நகர்ப்புற முன்கூட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
* பல்வேறு கலந்தறிதற்குரியவர் தேர்வு செய்யும் கட்டங்களுக்கு பிறகு 21.10.2013 அன்று கலந்தறிதற்குரியவர் நியமிக்கப்பட்டார்.
* 25.11.2013 அன்று தொடக்க திட்ட ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.02.2014 அன்று போக்குவரத்து ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.06.2014 அன்று சாத்தியக்கூறு மற்றும் மண் பரிசோதனை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 07.08.2014 அன்று இடைக்கால அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* 10.08.2014 அன்று மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது.
* 23.08.2014 அன்று மக்கள் கருத்து கேட்புக்கூட்ட ஆலோசனை மற்றும் கருத்துகள் அடிப்படையில் கலந்தறிதற்குரியவருடன் மாண்புமிகு மேயர் மற்றும் வட சென்னை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* 04.09.2014 அன்று பல்வேறு உத்தேச பணியிட வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
* 12.09.2014 அன்று ஐ.சி.எப், பொது மேலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
* 15.09.2014 மற்றும் 16.09.2014ல் ஐ.சி.எப்.க்கு சொந்தமான இடத்தில் ஐ.சி.எப். அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
* 17.09.2014 அன்று ரெயில்வே துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
* 19.09.2014 அன்று தென்னக ரெயில்வே மற்றும் ஐ,சி.எப் உடன் கலந்தாலோசித்ததை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பணியிட வரைபடம் தென்னக ரெயில்வேக்கு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
* 17.02.2015 அன்று மீண்டும் ஐ.சி.எப். இடத்தில் ஐ.சி.எப். அதிகாரிகளுடன் அயனாவரம் தாலூகா வருவாய் அதிகாரிகள் சென்னை மாநகராட்சி நிலம் மற்றும் உடைமைத் துறை கோட்டாச்சியர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலந்தறிதற்குரியவர் ஆகியோருடன் கூட்டுப்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
* கூட்டுப் புல ஆய்வின் போது, ஐ.சி.எப். தொழிற்சாலை வளாகத்தில், மேம்பாலத்திற்கு தேவைப்படும் நிலங்களின் அளவுகள் மற்றும் விஸ்தீரனம் ஐ.சி.எப். அதிகாரிகளுக்கு அளந்து நிலத்தில் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.
* கலந்தறிதற்குரியவர், கொளத்தூர் பிரதான சாலையில் இருபுறமும் உள்ள மனைகளின் அளவுகளும், மேம்பாலத்தின் ஒழுங்கினையும் ஒன்றின்மேல் ஒன்றாக துல்லியமாக வரையும் பணியினை தற்போது மேற்கொண்டுள்ளார்கள்.
இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டு வில்லிவாக்கம் கொளத்தூர் மேம்பாலப் பணிக்காக 2003ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும், மக்களின் முதல்வர் அம்மா தொடர்ந்து இத்திட்டத்தை வலியுறுத்தியதின்பேரில் 2005–2006 ஆண்டு ரெயில்வே திட்ட பட்டியலில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இத்திட்டம் ரத்தாகாமல் இருக்க தொடர்ந்து ரெயில்வே திட்டப் பட்டியலில் தொடர்வதற்காக சில லட்சங்கள் வருடா வருடம் ரெயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அந்த அடிப்படையில் தான் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் அறிவிப்பில் ரூ.7.35 கோடி ஒதுக்கப்படவில்லை.
2005–2006ல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, 16.01.2015 அன்று ரெயில்வே மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வைத்த கோரிக்கையை ஏற்று இந்த வருட ரெயில்வே பட்ஜெட்டில், ரெயில்வே மேம்பாலம் அமைத்திட ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மையில்லாதது என்பதை சென்னை மாநகராட்சி மேற்கண்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் மறுப்பதுடன் இதைப்போல பல தவறான செய்திகளை கொளத்தூரில் பேசி உள்ளார். இவை அனைத்திற்கும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற உதாரணம் மூலம் மறுப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.