Monday, 3 November 2014

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை பல்லாவரத்தில் ரெயில் மறியல் போராட்டம்


தாம்பரம்,
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் (2.11.2014) ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் துரைசாமி தலைமையில் சட்டத்துறை செயலாளர் இளங்கோவன், வடக்கு மண்டல அமைப்பாளர் அண்ணாமலை, அம்பேத்கர் மக்கள் நீதி இயக்க அமைப்பாளர் பாண்டியராசன் உள்பட பலர் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து பல்லாவரத்தில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பல்லாவரம் விடுதியில்வாலிபர் தற்கொலை முயற்சி

மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி பல்லாவரம் விடுதியில் வாலிபர் தற்கொலை முயற்சி போலீசாரின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்தார்
தாம்பரம்,
மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததால் ஏமாந்த வாலிபர், பல்லாவரம் விடுதியில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உரிய நேரத்தில் சென்று அவரை போலீசார் காப்பாற்றினர்.
மலேசியாவில் வேலை சேலம் ஜாகிர்அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(வயது 22). இவர், விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். வேலை தேடி வந்த இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் மலேசியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
அதற்காக ரூ.2 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த மாதம் 25–ந்தேதி அருணகிரியை மலேசியாவிற்கு அனுப்பினார். மலேசியா சென்ற அருணகிரிக்கு, சுற்றுலா விசாவில் வந்து இருப்பதாக கூறி வேலை தர மறுத்து விட்டதாக தெரிகிறது.
சென்னை திரும்பினார் அதன்பிறகே அவருக்கு அப்துல்லா ரூ.2 லட்சம் வாங்கிக்கொண்டு வேலைக்கான விசா என்று கூறி ஏமாற்றி, சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்த அருணகிரி, நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பி வந்தார்.
பின்னர் பல்லாவரம் தர்கா ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். ரூ.2 லட்சம் கொடுத்து வெளிநாட்டு வேலை கிடைக்காமல் ஏமாந்ததால் மனமுடைந்த அருணகிரி, நேற்று அதிகாலை சொந்த ஊரில் உள்ள தனது பெரியப்பா துரைசாமிக்கு போன் செய்து, வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என பணம் கொடுத்து ஏமாந்த விவரத்தை கூறினார்.
தற்கொலை முயற்சி மேலும் அவர், பல்லாவரத்தில் தங்கி உள்ள விடுதி முகவரியை தெரிவித்து, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த துரைசாமி, இதுபற்றி சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பல்லாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பல்லாவரம் போலீசார் அருணகிரி தங்கி இருந்த விடுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு விடுதி அறையில் அருணகிரி தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.
போலீசார் அவரை மீட்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உரிய சிகிச்சை அளித்து அருணகிரியின் உயிரை காப்பாற்றினர். இதற்கிடையில் துரைசாமியும் சென்னை வந்து விட்டார். போலீசார் அருணகிரிக்கு அறிவுரை கூறி துரைசாமியுடன் அனுப்பி வைத்தனர். போலீசாரின் துரித நடவடிக்கையால் வாலிபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

சென்னை நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை

சென்னை நகரில் (2.11.2014) வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதி முகாம் 3,509 இடங்களில் நடந்தது மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லைசென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு இறுதிக்கட்ட சிறப்பு முகாம் நேற்று 3,509 இடங்களில் நடைபெற்றது. மழை காரணமாக அதிகமானோர் பங்கேற்கவில்லை.

3,509 இடங்களில் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில், இந்த ஆண்டுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை பள்ளிகள் உள்பட 3 ஆயிரத்து 509 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 15-ந்தேதி சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தல், நீக்குதல் தொடர்பாக விண்ணப்பிக்கவும், மேலும் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் புதிதாக விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களை அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2-ந் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆன்-லைன், மண்டல அலுவலகங்களில்...

அதன்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான இறுதிகட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்களுக்கு படிவம்-6, திருத்தம் செய்பவர்களுக்கு படிவம்-8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்பவர்களுக்கு படிவம்-8ஏ, பெயரை நீக்குவதற்கு படிவம்-7, அடையாள அட்டை தொலைந்தவர்களுக்கு படிவம்-001 சி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு படிவம்-6ஏ ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன.

நேற்று காலை முதல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்ததால், சிறப்பு முகாம்களுக்கு அதிகமானோர் வரவில்லை என்று தெரிகிறது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தாதவர்கள் வருகிற 10-ந்தேதி வரை, ஆன்-லைன் மற்றும் மண்டல அலுவலகங்களில் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

மார்ச் மாதத்துக்குள்வண்ண அடையாள அட்டை

இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான திருத்தங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

முதலில், புதிதாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக் கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மற்றவர்களுக் கான வண்ண அடையாள அட்டைகளும் வழங்கப்பட உள்ளன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தேர்தல் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வாசன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை கைப்பற்ற முடியுமா?

சென்னை, நவ. 3–வாசன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை கைப்பற்ற முடியுமா?
பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய சத்திய மூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் வளாகம், காமராஜர் அரங்கம் உள்ளிட்டவை இந்த அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்த அறக்கட்டளை கட்சியின் மூத்த தலைவர்கள் 4 பேரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. அறக்கட்டளை சொத்துக்களின் பேரில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவையும் இவர்கள் ஒப்புதல் பெற்றே நிறைவேற்ற முடியும்.
ஜி.கே.மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அப்போது காங்கிரஸ் தலைமை இடமான சத்தியமூர்த்தி பவனையும் அந்த கட்சி கைப்பற்றிக் கொண்டது.
த.மா.கா. தொடங்கப்பட்ட 1996–ல் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பெறுப்பாளர்களாக ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், ப.ராமச்சந்திரன், என்.ராமசாமி உடையார் ஆகியோர் இருந்தனர். அனைவரும் மூப்பனார் முடிவை ஆதரித்தனர். எனவே சத்தியமூர்த்தி பவன் த.மா.க.விடமே இருந்தது.
ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா. தொடங்குவதால் சத்தியமூர்த்தி பவன் மீண்டும் அந்த கட்சியின் வசம் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்றாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகளாக இப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெயந்தி நடராஜன், சுதர்சனநாச்சியப்பன், ஜி.கே.வாசன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா ஆகியோர் உள்ளனர். எனவே, இன்றைய நிலைமைவேறு.
மூப்பனார் காங்கிரசில் இருந்து விலகியபோது அவரது கட்டுப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை இருந்தது. இப்போது ஜி.கே.வாசன் தவிர மற்ற 3 பேரும் கட்சி மேலிடத்தை மதிப்போம் என்று கூறுவதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையை ஆதரிக்கிறார்கள்.
மேலும் மூப்பனார் தலைமையில் அன்று காங்கிரஸ் செயல்பட்டதால், சத்தியமூர்த்தி பவனிலேயே த.மா.கா.வும் செயல்படத் தொடங்கியது. எனவே காங்கிரஸ் வேறு அலுவலகத்தை தேட வேண்டிய நிலமை ஏற்பட்டது.
இப்போது ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகி வெளியே சென்று விட்டார். புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் பதவி ஏற்று விட்டார். ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் வெளியே சென்று கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை பொறுப்பாளர்களில் ஜி.கே. வாசன் தவிர மற்றவர்கள் காங்கிரஸ் பக்கமே உள்ளனர். எனவே சத்தியமூர்த்தி பவனை ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் நெருங்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜி.கே. வாசன் நீக்கம்


காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் நீக்கம்
சென்னை, நவ. 3-

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்தார். இந்த கருத்தை ஜி.கே. வாசனும் ஆதரித்தார். ஞானதேசிகன் ராஜினாமா செய்த உடனேயே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். புதிய கட்சிக்கான கொடி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதிதாக கட்சி தொடங்குவேன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜி.கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை காரணமாக 6 வருடங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.


Friday, 31 October 2014

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பயன்படுத்துவது எப்படி? மின்ஆய்வுத்துறை வாரியம் விளக்கம்

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாதனங்களை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த மின்ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்ஆய்வுத்துறை அரசுத் தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னெச்சரிக்கை

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்படி மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ‘ஆப்’ செய்துவிட வேண்டும்.

கேபிள் டிவி வயர்கள்

குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, நில இணைப்புடன் (எர்த்) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைக்க வேண்டும். மின்கசிவு தடுப்பானை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்க்கலாம். கேபிள் டிவி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

மின்சார கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே கம்பியின் மீது, கயிறு கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்த வேண்டாம்.

இடி, மின்னல்

மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாதனங்களில் தீப்பிடித்தால் தீயணைப்பான்கள், உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்த வேண்டும். மாறாக தண்ணீரை கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.

இடி, மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடியில், பஸ் நிறுத்தம் மற்றும் வெட்ட வெளி பகுதி, தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி, மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி, கணினி, தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழைக்காலமாக இருப்பதால் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்

கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலையை உயர்ந்த பீடத்தில் அமைக்க வேண்டும் எச்.வசந்தகுமார் கோரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1987-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில், அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ்காந்தியால், கத்திப்பாரா சந்திப்பில் நேருவின் சிலை திறக்கப்பட்டது. கால சுழற்சி மற்றும் நகர வளர்ச்சி காரணமாக தற்போது இந்த சிலை மறைக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 14-ந் தேதி, நேருவின் 125-ம் ஆண்டு தொடங்குகிறது. இதற்கென தமிழக அரசு தனி குழு அமைத்து, அவரது 125-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையை மக்கள் பார்வையில் படும் வகையில் உயர்ந்த பீடத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிலையை சுற்றி வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்று அமைத்து, அதனை சுற்றி சிறுவர்கள் விளையாடும் எழில்மிகு பூங்கா அமைத்திட வேண்டும்.

மேலும் நேருவின் வாழ்க்கை வரலாற்றை கல்வெட்டில் செதுக்கி, வருங்கால சந்ததியினர் அறிய செய்திட வேண்டும். இவை அனைத்தும் நேருவின் 125-ம் ஆண்டு நிறைவுக்குள் நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்பு


சென்னை புரசைவாக்கத்தில் 2 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
2 மாடி கட்டிடம் சென்னை புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் உள்ள 2 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து, கீழ்ப்பாக்கம், ஐகோர்ட்டு, எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதலில் கட்டிடத்திற்குள் யாரும் சிக்கியுள்ளார்களா? என்று பார்த்தனர்.
இதில் கட்டிட உரிமையாளர் உத்தம் சந்த் (வயது 51), அவருடைய மனைவி சந்திராபாய் (44), மகன் நேகுல் (21), மகள் மோனிகா (21) (இவர்கள் இருவரும் இரட்டையர்கள்), கமலா பாய்(65) ஆகிய 5 பேரும் உள்ளே சிக்கி இருப்பது தெரியவந்தது.
அப்பளம் போல் நொறுங்கியது கட்டிடம் இடிந்து இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் நுழைவுவாயில் அருகே விழுந்து கிடந்ததால் சிறிய அளவிலான இடைவெளி இருந்தது. இதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அந்த வழியாக சென்று உள்ளே சிக்கிய 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெரிய சுவர் விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கார் கட்டிடத்தின் கீழ்தளத்தில் கடை வைத்திருக்கும் சுந்தர் என்பவருக்கு சொந்தமானது. அதேபோல் கட்டிடத்தின் அருகே இருந்த மரத்தின் மீதும் கட்டிடத்தின் சுவர் விழுந்தது. இதனால் அந்த மரமும் சாய்ந்தது.
பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த கட்டிடம் சுமார் 62 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும். இந்த 2 மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் 4 கடைகளும், அதன்பின்னால் ஒரு வீடும் உள்ளது. முதல் மற்றும் 2–வது தளத்தில் 1980 முதல் 1990 வரையில் கல்யாண மண்டபம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடத்தை சுற்றிலும் யாரும் உள்ளே சென்றுவிடாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:–
கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தோம். இதில் 5 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். நல்ல வேளையாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் சுவர்கள் கீழ்வீட்டின் நுழைவுபகுதியில் விழுந்தால் ஒரு சில இடைவெளி இருந்தன.
அந்த இடைவெளி வாயிலாக 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

மொய் பணத்தை திருடியதாக வாலிபர் கைது

சென்னை வடபழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது திருமண மண்டபத்தில் புகுந்து மொய் பணத்தை திருடியதாக, வாலிபர் ஒருவரை பிடித்து, திருமணத்திற்கு வந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார். அவரது பெயர் கார்த்திக் (வயது 28) என்றும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நேற்று நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைமைச் செயலாளர் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல் சென்னை மெரினாவில் பரபரப்பு

சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று காலையில் தனது காரில் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். கார் மெரினாவில் கண்ணகி சிலை சிக்னலில் நின்றது. அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், கார் மீது மோதிவிட்டது. கார் லேசாக சேதம் அடைந்தது. பின்னர் தலைமைச் செயலாளரின் கார் போய்விட்டது.
மோட்டார் சைக்கிளை கொடுங்கையூரைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். அவர் காரில் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். அவரை அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
காரை திடீரென்று பிரேக் போட்டு நிறுத்திவிட்டதால், நான் மோட்டார் சைக்கிளை கார் மீது மோதிவிட்டேன் என்று பத்மநாபன் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார். அவரை நேற்று மாலை வரை காவலில் வைத்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்தவருக்கு ரூ.3.5 லட்சம் இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை,
சென்னை பெரம்பூர், பெரியார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன அதிகாரி. இவர், கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு 9–ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர். அப்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில், சீனிவாசன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்து இருந்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சந்திரன், ‘விபத்தில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.3.5 லட்சம் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்தார்.

விஜயகாந்த் பற்றி அவதூறு சுவரொட்டி ஒட்டியவர் கைது

அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜி(வயது 29). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நேற்று கொரட்டூர் பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி அவதூறான வார்த்தைகள் கொண்ட சுவரொட்டியை ஒட்டியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. துணை செயலாளரான கொரட்டூர் ரெயில் நிலைய ரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார்(42) என்பவர் கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகாந்த் பற்றி அவதூறு சுவரொட்டி ஓட்டியதாக கோவிந்தராஜை கைது செய்தனர்.

Admagnet - X

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க உத்தரவு மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை


சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
கடந்த வாரத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால், நேற்று வரை, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடும் பணி மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மேலும், வடகிழக்கு பருவ மழையினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கையாக பல்வேறு பணிகள் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அனைத்து மண்டலங்களிலும் நேற்று குடிசை பகுதிகளில் 36 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் 3144 பேர்கள் பயனடைந்துள்ளனர். மொத்தம் இதுவரையில் 185 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 13,632 பேர்கள் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்களில் நோய் அறிகுறிகளில் கண்டறியப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவில் நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சென்னை கலெக்டர் அலுவலகம் ஜப்தி? திடீர் பரபரப்பு

சென்னை,

கோவில் நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் சென்னை கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக வந்த தகவலால் கலெக்டர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

சென்னை கலெக்டர் அலுவலகம் ஜப்தி?

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதனை அடுத்து பத்திரிகையாளர்கள், டிவி நிருபர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அலுவலக ஊழியர்களும், தங்கள் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட உள்ளது என்று தெரிந்த உடன் பரபரப்புக்கு உள்ளானார்கள்.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் ஜப்தி நடவடிக்கையை அறிந்து, திகைத்து நின்றனர். அலுவலகத்துக்கு வந்தவர்களை பாதுகாவலர்கள் தீவிரமாக விசாரணை செய்த பின்னரே அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையும் பரபரப்பாக காணப்பட்டது.

பகல் 1 மணி அளவில் அவ்வாறு எந்த ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

கோவில் நிலத்துக்கு இழப்பீடு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வெங்கீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதி, நெடுஞ்சாலை துறை தேவைக்காக, சென்னை பெருநகர குழுமம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது. இதற்காக ரூ.37 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த தொகையை குறிப்பிட்ட காலத்தில் வழங்கவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தாசில்தாரை அணுகி விவரம் கேட்க சென்ற போது, அவர்களால் அதிகாரிகளை சந்திக்க முடியவில்லை. இதனால் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து நவம்பர் 6-ந்தேதிக்குள் பணத்தை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அலுவலகத்தில் உள்ள கணினி, மின்விசிறி, மேஜை, நாற்காலி, பிரோ போன்றவை ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டது.

கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இழப்பீடு தொகை வழங்கப்படும். அதற்குள் கலெக்டர் அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

தாம்பரத்தில் இரு தரப்பினர் மோதல்: பலத்த போலீஸ் பாதுகாப்பு கமிஷனர் ஜார்ஜ் ஆய்வு

தாம்பரம்,

தாம்பரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு செய்தார்.

இரு தரப்பினர் மோதல்

சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் யாக்கூப், செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்படும் என்ற தகவல் கிடைத்ததால் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு காரில் வந்த ஒரு கும்பல், யாக்கூப் தரப்பினரை அரிவாளால் வெட்டினர். இதில் 3 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகராறில் எதிர் தரப்பினர் 4 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரின் புகாரையும் பெற்று, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கமிஷனர் ஆய்வு

இதையடுத்து இரு தரப்பினர் இடையே மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க தாம்பரம் மார்க்கெட் பகுதி ரங்கநாதபுரம், காந்தி ரோடு, கஸ்தூரிபாய்நகர் பகுதிகளில் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை தாம்பரம் வந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

தாம்பரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவர் கைது

தானே,

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியிடம் தகராறு

தானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார்.

அப்போது அவர் தனக்கு மது குடிக்க பணம் வேண்டும் என்று கூறி ராக்மாவிடம் தகராறு செய்தார். ஆனால் ராக்மா தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.

காதை கடித்து குதறினார்

குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ராக்மா பணம் சேமித்து வைத்துள்ளதை தெரிந்துகொண்ட பப்பு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பண தர மறுத்து மனைவி தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பப்பு, ராக்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அவர் ராக்மாவின் காதை கடித்து குதறினார்.

இதில் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்த ராக்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கல்யாணில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கோன்காவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்புவை கைது செய்தனர்.

கருப்பு பண விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆலோசகர் நியமனம்



புதுடெல்லி,

கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆலோசகராக இந்திய வருவாய் பணியின் மூத்த அதிகாரி கே.வி.சவுத்ரியை மத்திய அரசு நியமித்துள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்கீழ், நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும் 11 உறுப்பினர்களையும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவின் ஆலோசகராக இந்திய வருவாய் பணியின் மூத்த அதிகாரி கே.வி.சவுத்ரியை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் ‘சி.டி.பி.டி.’ என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் கருப்பு பண விவகாரத்தை நீண்ட காலமாக கையாண்டு வந்ததாலும், அது தொடர்பான ஆலோசனைகளிலும் பங்கேற்று வந்திருப்பதாலும், சிறப்பு புலனாய்வு குழுவில் அவர் தொடர வேண்டும் என்று மத்திய அரசும், சிறப்பு புலனாய்வு குழுவும் விரும்பியதின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கந்த சஷ்டி தொடங்கி புதன்கிழமை மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது. வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, காலையில் தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் தனிச்சப்பரத்தில் எழுந்தருளி தெற்குரதவீதி.-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி- அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
நள்ளிரவில் திருக்கோவில் இராஜகோபுர வாசலில் உள்ள திருப்பணி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்கள் மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

ராஜபட்ச உருவபொம்மை எரிப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 32 பேர் கைது


தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு தூக்க தண்டனை விதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இலங்கை அதிபர் ராஜபட்சே உருவபொம்மையை எரித்து கண்டன கோஷமிட்டனர். சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நகர போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து மாலை விடுவித்தனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை அரசு தூக்க தண்டனை விதித்தை கண்டித்து, இலங்கை அரசின் தமிழினப் பகையையும், இந்திய அரசின் சிங்கள ஆதரவுப் போக்கையும் கண்டித்தும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில்  சிதம்பரம் மேலவீதி - வடக்குவீதி சந்திப்பு பெரியார் சிலை அருகில் இலங்கை அதிபர்  ராஜபட்சே உருவபொம்மை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் ஆ.குபேரன் தலைமை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், மு.முருகவேள், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் விடுதலைச்செல்வன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் வே.சுப்ரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

சென்னை, அக். 31-நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் 1956 நவம்பர் 1-ந்தேதி. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் தமிழகம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அண்டைய மாநிலங்கள் எல்லாம் மாநிலம் உருவான நாளை கட்சி பாகுபாடின்றி ஒருமித்து ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடும்போது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை.

சாதி, மத வேறுபாடின்றி குறிப்பாக கட்சி வேறுபாடு பார்க்காமல் தமிழர்கள் நாம் என்ற உன்னதமான உணர்வை ஏற்படுத்தக் கூடிய நாள் இது. கர்நாடகத்தில் 1 வாரம் கொண்டாடுகிறார்கள். அவரவர் கட்சிக் கொடிகளை வாகனங்களில் கட்டுவதை இந்த 1 வாரத்திற்கும் தவிர்த்து அனைவரும் கர்நாடக மாநில கொடியை கட்டுகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் மாநிலக் கொடியை ஏற்றுகிறார்கள்.

தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கொடியை வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிக்காரர்களும் நவம்பர் 1-ந்தேதி கட்டினால் தமிழன் என்ற உணர்வு தழைத்தோங்கி நிற்கும். அண்டை மாநிலத்தவரைப் பற்றி பேசுவதை விட்டு, தமிழ்நாட்டு ஒற்றுமையை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது தேவையான ஒன்று என்பதை உணர வேண்டும்.

தமிழக அரசோ மற்ற தமிழ் இயக்கங்களோ இதை கண்டு கொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது. நம்முடைய தமிழர் நாட்டை பேணி பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும்.

தமிழக அரசு தமிழ்நாடு தினத்தை கொண்டாட வேண்டும். நவம்பர்-1 தமிழ்நாடு தினம் என்பதை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு, பண்பாடு குறித்த கண்காட்சி இடம் பெற வேண்டும். இதை நாம் இப்போது செய்யத் தவறினால் நாளை தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும்.

வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிலோ தமிழ்ப் பேசுபவர்களைப் பார்த்தால் ஒன்றாகிற உணர்வு தமிழகத்திலேயே ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது உண்டாக வேண்டும். அனைத்து வீடுகளின் உச்சியிலும் தமிழகம் பூராவும் தமிழ்நாட்டுக் கொடி பறக்க வேண்டும். இதையெல்லாம் அடுத்த ஆண்டாவது உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் என் இனிய தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு

print

போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு
ஐதராபாத், அக்.31-

நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் உயரதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை முடித்துவிட்டு, ஐ.பி.எஸ். பட்டத்துடன் வெளியேறும் அதிகாரிகளுக்கு இன்று வழியனுப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

அநீதிகளை எதிர்த்து தங்களால் ஏதும் செய்ய இயலாதவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஆகியோர் தயக்கமின்றி அணுகக்கூடிய நீதியின் ஆலயங்களாக போலீஸ் நிலையங்கள் திகழ வேண்டும். அப்போதுதான், போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான உள்நோக்கம் நிறைவுபெற முடியும்.

கடமையில் இருக்கும் போலீசார் எவ்வித குறுகிய மனப்பான்மையோ.., மதரீதியிலான கண்ணோட்டமோ இன்றி பணியாற்றினால்தான் உங்களது சீருடைகள் உண்மையில் ஒளிரும். அதன் மூலம் மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக விளங்க முடியும்.

முன்னர், நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசை பாதுக்காப்பதே போலீசாரின் பணியாக இருந்தது. ஆனால், நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தப் பிறகு இன்றோ.., சராசரி மக்களை பாதுகாப்பது உங்களின் பணியாக மாறியுள்ளது.
  
நாட்டின் முதல் சேவகனாக பணியாற்ற விரும்புவதாக நமது பிரதமர் ஏற்கனவே கூறியதுபோல், இந்த சமுதாயத்துக்கு சேவையாற்றும் மனப்பக்குவத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டை பாதுகாப்பாகவும், சமூக மற்றும் மத ஒற்றுமை கொண்டதாகவும் பராமரிப்பதே உங்களது நோக்கமும், எங்களது நோக்கமும் ஆக உள்ளது. நாடும், நாட்டின் மக்களும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த வல்லரசாக உருவாக முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


புதுவை சுதந்திர நாள்: ரங்கசாமி–தலைவர்கள் வாழ்த்து

புதுவை சுதந்திர நாள்: ரங்கசாமி–தலைவர்கள் வாழ்த்து
புதுச்சேரி, அக்.31–
புதுவை சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அவை வருமாறு:–
முதல்–அமைச்சர் ரங்கசாமி:–
என் அன்பிற்கினிய புதுவை மக்கள் அனைவருக்கும் முதற்கண் எனது இனிய ‘புதுவை விடுதலை நாள்’ நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தொன்மை, பாரம்பரியம், கலாச்சாரம், இலக்கிய வளமை என அனைத்திலும் தனித்துவம் பெற்று விளங்கும் நமது புதுவை மாநிலம் பிரெஞ்சியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த மகத்தான நாள் இந்நாள்.
1954–ம் ஆண்டு நவம்பர் 1 என்ற இந்நாளில் தான் பிரெஞ்சுக்கொடி இறக்கப்பட்டு இந்திய தேசிய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நாள்.
இந்த நாள் புதுவை விடுதலை நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை கைவரப் பெற்றுள்ளது. இது நம் மண்ணிற்கு மேலும் ஒரு பெருமையாகும். நமது தேசிய சுந்திரதினவிழாவை போற்றுவது போலவே, புதுவை விடுதலை நாளை போற்றுவோமாக.
இந்த அரும்பெரும் விடுதலையை நமக்களித்த தியாகிகளையும் அவர்தம் தியாகங்களையும் இந்நாளில் நினைவு கோருவோம். ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளோடு உலக சமுதாயத்திற்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது. இதன்வழி நமது மாநிலமும், மக்களும் தேச நலன் காக்கும் சிந்தனையோடு செயல்பட்டு விளங்குவது இந்த அரசின் எண்ணமாகும்.
மேலும், நமது மாநிலத்தின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த இவ்வரசு அயராது பாடுபடும் என்பதையும் இவ்வேளையில் தெரிவித்து கொள்கிறேன். நாம் நமது வேற்றுமைகளை மறந்து மாநிலத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, உயர்வு, தொன்மை, சகோரத்துவம் ஆகியவற்றை இவ்விடுதலை நாள் வேண்டுதலாக ஏற்று அதை நோக்கிய நமது செயல்பாட்டை வழிவகுப்போம்.
நமது புதுச்சேரி மாநிலம் எழில்மிகு ஏற்றமிகு மாநிலமாக என்றும் தழைக்க பாடுபடுவோம். இவ்விடுதலை நாள் கொண்டாட்டத்தில் மீண்டும் விடுதலை போராட்ட வீரர்களை வணங்கி, எனது விடுதலை நாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராதாகிருஷ்ணன் எம்.பி.:–
புதுச்சேரி மாநிலத்தின் 60–வது விடுதலைநாள் திருவிழாவைக் கொண்டாடிடும் மாநில மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
1954–ம் ஆண்டு புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பிரெஞ்சுக்கொடி கீழிறக்கப்பட்டு, இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தநாள் நவம்பர் 1–ந் தேதி ஆகும். இதுவே நம் விடுதலைநாள். நவம்பர் 1–ந் தேதியை புதுச்சேரி விடுதலைநாளாக கொண்டாட வலியுறுத்திய இயக்கங்களுக்கும், இந்த நாளை நமது அதிகாரப்பூர்வமான விடுதலைநாளாக அறிவித்து, வரலாற்றுப்பிழையை சரிசெய்த முதல்வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
விடுதலை போரில் பங்கேற்ற தியாக மறவர்களையும், பஞ்சாலை தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த விடுதலைநாளில் புதுச்சேரி மாநில உயர்வுக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாம் வலுசேர்ப்போம். பெற்ற சுதந்திரத்தை பேணிகாத்து, மாநில வளர்ச்சிக்கு எந்நாளும் பாடுபடுவோம் என்ற உறுதியை ஏற்போம்.
ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ.:–
புதுச்சேரி மாநிலம் விடுதலை பெற்ற இந்த 60–ம் ஆண்டு வைர விழா நாளில், புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளையும், அவர்களுக்கு தோள் கொடுத்தவர்களையும் இந்த நாளில் நன்றியோடு நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இதுமட்டுமின்றி 1955–ல் அமைந்த புதுவை அரசின் முதல் முதல்–அமைச்சரான பக்கிரிசாமிபிள்ளை தலைமையிலான அமைச்சரவை சகாக்களும், 39 எம்.எல்.ஏ.க்களும் புதுவை மாநிலத்துக்கு தொலைநோக்கு பார்வையோடு ஜிப்மர் மருத்துவமனை, 54 அரசு பள்ளிகள், கிராம மருத்துவமனைகளையும் அமைத்து கொடுத்தனர். இந்த இனிய புதுவை விடுதலை வைர நாளில் இவற்றையெல்லாம் நன்றியோடு நினைவு கூர்ந்து புதுவை மக்களுக்கு புதுவை விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.


பில் கேட்ஸ் சொத்து மதிப்பை செலவிட 218 ஆண்டுகளாகும் - ஆய்வில் தகவல்

லண்டன், அக்.31-

ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.

இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220 ஆண்டுகளில் செலவிடமுடியும். வாரென் பப்பெட் இதே முறையில் 169 ஆண்டுகளில் அவரது செல்வத்தை செலவிட முடியும்.

ஆக்ஸ்பாம் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதார மந்தநிலையின் போது உலக பில்லியனர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு 794 ஆக இருந்த உலக பில்லியனர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 1,645 ஆக மாறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உலக செல்வந்தர்களாக திகழும் பில் கேட்ஸ், வாரென் பப்பெட் ஆகியோர் சமூக நல மற்றும் அறப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பில்கேட்ஸ் நடத்தி வரும் பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளைக்கு 2014 ஆம் ஆண்டில் மட்டும் வாரென் பப்பெட் 3 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் பறவை மோதியதால் 120 பேருடன் சார்ஜா சென்ற விமானம் திடீர் தரையிறக்கம்


கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் வளைகுடா நாடுகளில் ஒன்றான சார்ஜாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

ஓடுபாதையில் இருந்து உயரக் கிளம்பியபோது, விமானத்தின் எஞ்சின் பகுதி மீது எதிர்திசையில் இருந்துவந்த ஒரு பறவை மோதியது. இதை கவனித்துவிட்ட விமானி, உடனடியாக அந்த விமானத்தை கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 120 பேரும் கோவை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உரிய பரிசோதனைகளுக்கு பின்னர் அந்த விமானம் சார்ஜாவிற்கு புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 30 October 2014

சர்ச்சை கருத்து: ப.சிதம்பரத்துக்கு கண்டனம்

சென்னை, அக். 29–
தமிழக காங்கிரஸ் துணை தலைவர் தாராசபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆவார் என்று ப.சிதம்பரம் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
இது அவரது சொந்த கருத்து சோனியாகாந்தி ராகுல்காந்தியால் சிதம்பரம் மத்திய மந்திரியாக்கப்பட்டார். அவர் இப்போது இப்படி பேசி இருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. அதை அவர் தொண்டர்கள் மத்தியில் விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவர் சிதம்பரம் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சர்ச்சை கருத்து: ப.சிதம்பரத்துக்கு கண்டனம்

சென்னையில், நாளை மறுநாள் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக், 29–
தமிழ்நாடு டாஸ்மாக் பார் கட்டிட உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் நாளை மறுநாள் (31–ந்தேதி) சென்னை அண்ணா சாலை மின்வாரிய அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் பார் ஏலத்தில், விண்ணப்ப படிவத்தில் கட்டிட உரிமையாளரின் தடையில்லா சான்று அவசியம் என்பதை தெரிவிக்க வேண்டும், பார் விற்பனைக்கு ஏற்ப வளர்ச்சி விகித சதவீதம் நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். மாதாந்திர பார் உரிமை தொகையை செலுத்தும் போது கால தாமதம் என கூறி 12 சதவீத வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், இரவு 10.30 மணி வரையில் டாஸ்மாக் பார் கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த ஆர்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பரசன் கூறும்போது, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை, அக்.30-ஜெயலலிதாவுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சந்திப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 16 அமைச்சர்கள் நேற்று பிற்பகல் சந்தித்தனர். சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் கொடுப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அந்த காசோலைகளை உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம் இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா கூறிதாக தெரிகிறது. மேலும் அரசுத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிக்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். 

சென்னையில் 485 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

,சென்னை அக்.30-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணியாளர்களை தேர்ந்து எடுப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சென்னை மாவட்டத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் விவரம்:

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் - 151
குறு அங்கன்வாடி பணியாளர்பணியிடங்கள் - 36
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் - 298

வயது:

அங்கன்வாடி பணியாளர் - 25-35 வயது
குறு அங்கன்வாடி பணியாளர் - 25-35 வயது
அங்கன்வாடி உதவியாளர் - 20-40 வயது

கல்வித்தகுதி:

அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்கள்- பத்தாம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி உதவியாளர் - தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காலியாக உள்ள மையங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் வெளிப்படுத்தப்படும். தகுதி வாய்ந்த உள்ளூர் பெண் நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு நவம்பர் 11-ந் தேதி மாலை 5 மணி வரை வந்து சேரலாம். இதுகுறித்து விவரம் வேண்டுவோர் அந்தந்த பகுதியிலுள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியை அணுகலாம்.

இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல்: பரனூர் சுங்கச்சாவடியில் விக்கிரமராஜா போராட்டம்

சென்னை, அக்.30–
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். உத்திரகுமார் பாபு, பக்தவச்சலம், செல்வ மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆயிரக்கணக்கான வியாபாரிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது விக்கிரமராஜா பேசியதாவது:–
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலித்தால் சாலைகளை செப்பனிட வேண்டும். மருத்துவ வசதி செய்து தர வேண்டும். ஆனால் எதுவுமே செய்யாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இதை கண்டித்து மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு கொடுத்துள்ளோம். பரனூர் சுங்கச்சாவடியில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த சுங்கச்சாவடியை அரசு இழுத்து மூட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது.
இவ்வாறு விக்கிரமராஜா பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.மணி, ஆவடி அய்யார்பவன் அய்யாத்துரை, ஆலந்தூர் கணேசன், மண்டல தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர்கள் அமல்ராஜ், என்.டி.மோகன், ஜோதியார், மாரித்தங்கம், ஜெயபால், ஆதிகுருசாமி, மாவட்ட நிர்வாகிகள் அம்பத்தூர் ஹாஜி முகம்மது, மகாலிங்கம், பொன்பாண்டியன், கந்தராஜ், பால்ஆசீர் பாலகிருஷ்ணன், அயனாவரம் சாமுவேல், தேசிகன், சின்னவன், அடையார் பாஸ்கர், கோவிந்தராஜ், துரை, சுப்பிரமணியம், ஆர்.எம்.பழனியப்பன், கோவிலம்பாக்கம் பொன் ராஜ், பழம்பொருள் அணி அமைப்பாளர் இ.எம்.ஜெயக்குமார், தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் பூவை ஜெயக்குமார், அயூப்கான், மதுரவாயல் குமார், கோபால், செந்தில், ஜெயக்குமார், குன்றத்தூர் ஜெகதீஷ், ஊரப்பாக்கம் முருகன், செங்கல்பட்டு பால்ராஜ், செல்வராஜ், தாமோதரன், முத்துராஜ், மதுராந்தகம் முகமதுஅலி, சக்திகுமார், பிரபாகர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் லாரி, வேன் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தி.மு.க. கூட்டணிக்கு மதிமுக வந்தால் வரவேற்போம்: கருணாநிதி பேட்டி

சென்னை, அக். 30–
2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., பா.ம.க. சேரும் என்று செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு அச்சாரமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் இந்த கட்சி தலைவர்கள் சந்தித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டது.
அதன்படி நேற்று மகாபலிபுரத்தில் நடந்த டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் சந்தித்துக் கொண்டனர்.
வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், சகோதரி செல்வி ஆகியோர் சந்தித்தனர். இரு குடும்பத்தினரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
வைகோ, ஸ்டாலினிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தார். ஸ்டாலின், வைகோவின் தாயாரின் உடல் நலம் பற்றி கேட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ‘அன்பு சகோதரர் ஸ்டாலின் என்னை சந்தித்தது அரசியல் நாகரீகத்துக்கு சான்று’ என்றார். மு.க.ஸ்டாலினிடம், ‘இது கூட்டணிக்கு அச்சாரமா?’ என்று நிருபர்கள் கேட்டபோது, ‘உங்கள் விருப்பம் அது வென்றால் நிறைவேறும்’ என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று டாக்டர் ராமதாசின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகாபலிபுரம் புறப்பட்டார். அப்போது கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
கேள்வி:– தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து இருக்கிறார். இது தி.மு.க.–ம.தி.மு.க. புதிய கூட்டணிக்கு தொடக்கமா?
பதில்:– தொடக்கமாக இருந்தால் மகிழ்ச்சி.
கே:– டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் அவரையும் பல்வேறு கட்சி தலைவர்களையும் சந்திப்பீர்கள். இது புதிய கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்படுத்துமா?
ப:– அந்த கட்சிகள் விரும்பி புதிய கூட்டணி உருவானால் தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடி அதை மகிழ்ச்சியுடன் ஏற்கும்.
கே:– வைகோ–மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து உங்கள் கருத்து?
ப:– நாங்கள் பகைவர்கள் அல்ல. நீண்ட கால நண்பர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, சட்டசபை தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைவது இப்போது உறுதியாகிவிட்டது என்றார்.

ரூ. 50 லட்சம் பண மோசடி: வாலிபர் கைது

சென்னையில் ரூ. 50 லட்சம் பண மோசடி: வாலிபர் கைது
சென்னை, அக். 30–
சென்னை ஜாபர்கான் கோட்டையை சேர்ந்தவர் அரசு. இவர் குன்றத்தூரில் உள்ள தாய்மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த கோவில் நிர்வாகி சாந்தம்மாள் அவரது மகன் கார்த்திக் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது. கோவிலை நிர்வகிக்க சாந்தம்மாளும், கார்த்திக்கும் அரசுவிடம் ரூ. 50 லட்சம் கேட்டனர். அரசு ரூ. 50 லட்சம் கொடுத்தார்.
பின்னர் அரசு பணத்தை கேட்ட போது காந்தம்மாள் தனக்கு சொந்தமான 10 செனட் நிலத்தை தருவதாக கூறினார். ஆனால் நிலத்தையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. அரசு பணத்தை கேட்டதால் சாந்தம்மாளும், கார்த்திக்கும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து அரசு கமிஷனர் ஜார்ஜிடம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கூடுதல் கமிஷனர் நல்லசிவம் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் செல்வகுமார் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி ரூ. 50 லட்சம் மோசடி செய்த கார்த்திக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை


தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தமிழக மீனவர்கள் ஐவருக்கு தூக்கு தண்டனை: கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொழும்பு, அக். 30-

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.

கடலில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இலங்கையை சேர்ந்த மூவருக்கும் தூக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், இந்த தீர்ப்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது

சாலையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

பெங்களூரில் சாலையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

 
பெங்களூரில் சாலையை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
பெங்களூர், அக்.30-

பெங்களூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் “தூய்மையான இந்தியா“ அபிவிருத்தி திட்டத்தை பின்பற்றி சாலைகளை சுத்தப்படுத்தினர்.

விஜயா ஆசிரியர்கள் கல்லூரியை சேர்ந்த 160 மாணவர்கள் ஜெயநகர் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதுநிலை பட்டதாரி மாணவர் ராஜேஷ், 'பிரதமர் மோடி தூய்மையான இந்தியா அபிவிருத்தித்திட்டத்திற்காக பிரபலமானவர்களை அழைத்தார். மக்கள் அவர்களை பின்பற்றுவார்கள் என மோடி அதனை செய்தார். ஆசிரியர்களையும் மக்கள் பின்பற்றுவார்கள். எங்கள் கல்லூரியை சுற்றியும் குப்பைகள் இருக்கும், நாங்கள் சுத்தப்படுத்திய பின் எங்கள் கல்லூரி இன்னும் அழகாக உள்ளது.

நாங்கள் இப்போது குப்பையை பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம், எங்கள் கல்லூரி மாணவர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுவதை பார்த்து பிற கல்லூரி மாணவர்களும் இதனை செய்ய முன்வந்துள்ளனர்’ என தெரிவித்தார்.  

துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு

துண்டிக்கப்பட்ட தலையை எடுக்க சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் சஸ்பெண்டு
லக்னோவில் உள்ள சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுக்கும்படி சிறுவனை வற்புறுத்திய காவல் துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரை சேர்ந்த ராமானந்த் என்பவர் லக்னோ சார்பாக் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது சடலம் வெகு நேரமாக ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ளது. சடலத்தை மீட்க காவல் துறையினர் விரைவாக செயல்படாததால் நாய், எலி போன்றவை சடலத்தை சாப்பிட துவங்கியதாகவும், பொதுமக்கள் அவற்றை விரட்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு இருந்த இளைஞன் மற்றும் சிறுவனை துண்டிக்கப்பட்ட தலையையும், சடலத்தையும் எடுக்க வற்புறுத்தியதாக தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறை டி.ஐ.ஜி (ரெயில்வே) ஜாவீத் அகமத், உதவி ஆய்வாளர் ஒருவரையும், இரு காவல் துறையினரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி
தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி
மும்பை, அக்.30-

மும்பையில் பாலியல் வன்கொடுமையிலிருந்து தனது தாயை 4 வயது சிறுமி ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளார்.

மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள், பின் வீட்டிலிருந்து வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார்.

சிறுமியின் சமயோசித செயலால் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நபரை பிடித்த மக்கள், அவரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீது சட்டப்பிரிவு 354 மற்றும் 452-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், தற்போது கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


அம்மா திரையரங்கம்

250 பேர் பார்க்கும் வசதியுடன் அம்மா திரையரங்கம்


சென்னை, அக்.30-

ஏழைகளின் பசியை போக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட்ட ‘அம்மா’ உணவகம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஏழைகளும், பணக்காரர்கள் போன்று ஷாப்பிங் மால்களில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய திரையரங்குகளில் சினிமா பார்த்து பொழுதை கழிப்பதை போன்று, குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘அம்மா’ திரையரங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் திரையரங்குகள் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் திரையரங்குகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் திரையரங்குகள் கட்டுவது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ‘அம்மா’ திரையரங்குகள் செயல்பட உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

முதல் கட்டமாக புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மண்டல அலுவலகம்-3 இருந்த இடம், மின்ட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கிடங்கு இருந்த பகுதி, வளசரவாக்கத்தில் குடிநீர் வாரியம் பம்பு செட் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம், கோடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான யூனிட் அலுவலகம், கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் ஆகிய 5 இடங்களில் ‘அம்மா’ திரையரங்குகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் 2 ஏக்கரிலிருந்து 8 ஏக்கர் வரை இடங்கள் உள்ளன.

இவற்றில் தனியார் ஷாப்பிங் மால்கள் போன்று ஒரே இடத்தில் 4 முதல் 8 திரை அரங்குகள் வரை அமைக்கப்பட உள்ளன. கட்டிட கலை நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு வருகின்றன. ஓரிரு மாதங்களில் கட்டுமானப்பணியை தொடங்கி 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணியை முடித்து ‘அம்மா’ திரையரங்குகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எப்படியும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 முதல் 100 திரைகள் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 200 முதல் 250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்பட உள்ளன.

இந்த ‘அம்மா’ திரையரங்குகளில் தனியார் திரையரங்குகளில் வெளியாவது போன்று புதிய திரைப்படங்கள் வெளியிடப்படுவதுடன், தனியார் திரையரங்கு கட்டணம் போன்று இல்லாமல் ஏழைகளும் சினிமா பார்க்கும் வகையில் தரமான வசதியுடன், குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டண விபரத்தை தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: எழும்பூர் ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு சிகிச்சை

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: எழும்பூர் ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு சிகிச்சை
வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ: எழும்பூர் ஆஸ்பத்திரியில் தினமும் 100 பேருக்கு சிகிச்சை
சென்னை, அக். 30–
கோடை காலத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய், சென்னையில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
எப்போதும் இல்லாத வகையில் மழைக்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கண் நோய், சென்னையில் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி பரவிக் கிடக்கிறது. இதனால் சென்னையில் பலர் கண்ணாடி அணிந்தபடியே வலம் வருகிறார்கள்.
ஒருவிதமான வைரஸ் மூலமாகவே, பரவும் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
3 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்தால் ‘மெட்ராஸ் நோய்’ கண் நோய் குணமாகி விடும். ஆனால் தற்போது பரவி வரும் ‘மெட்ராஸ் ஐ’ நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. 10 நாட்கள் வரை இதன் பாதிப்பு இருக்கிறது.
கண் நோயை ஏற்படுத்தும் வைரசின் வீரியம் அதிகமாகி இருப்பதே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
‘மெட்ராஜ் ஐ’–யால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், டாக்டர்களிடம் சென்று கண் பரிசோதனை செய்து கொள்வதில்லை. இதற்கு மாறாக மருந்து கடைகளில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி கண்களில் ஊற்றிக் கொள்கிறார்கள்.
இது போன்று செய்வதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு கண் பார்வை பாதிக்கப்படும் அபாயமும் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு நோய் பாதிப்பு அதிகமான பின்னரே பலர் சிகிச்சைக்கு செல்கிறார்கள். தினமும் 100 பேர் வரை இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் கண் நோய்க்கான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்யும் முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
மழைக்காலத்தில் கண் நோய் பரவுவது ஏன்? என்பது பற்றியும் ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக கண் நோய் பாதிப்புடன் வரும் நோயாளிகளிடமிருந்து, நோய் பாதிப்பு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை மேலும் சில நாட்கள் தொடர ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் பின்னர், இந்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி கண் நோய்க்கான காரணத்தை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படத்தை அகற்ற காங். மேலிடம் உத்தரவு: ஜி.கே.வாசன் எதிர்ப்பு



புதிய உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படத்தை அகற்ற காங். மேலிடம் உத்தரவு: ஜி.கே.வாசன் எதிர்ப்பு
புதிய உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படத்தை அகற்ற காங். மேலிடம் உத்தரவு: ஜி.கே.வாசன் எதிர்ப்பு
சென்னை, அக். 30–
பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து காங்கிரசை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. புதிய உறுப்பினர்களை சேர்த்து, தேர்தல் நடத்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது. அப்போது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். இதில் தனி நபர் நலனை பார்க்கக் கூடாது என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டார். இதையடுத்து உறுப்பினர் அட்டை பற்றிய விவாதம் நடந்தது.
காங்கிரஸ் புதிய உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் இருவர் படம் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும். வேறு யார் படமும் இடம் பெறக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கூறினார்கள்.
இதற்கு முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாட்டில் வினியோகிக்கப்படும் உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்றார்.
அதற்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள், ‘‘உறுப்பினர் அட்டையில் காமராஜர் படத்தை அச்சிட கூடாது. சோனியா, ராகுல் இருவர் படம் மட்டுமே இடம் பெற்றிருக்க வேண்டும்’’ என்றனர்.
இதையடுத்து வாசன் உடனே மீண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். என்றாலும் மேலிடத் தலைவர்கள், உறுப்பினர் அட்டைகளில் காமராஜர் படத்தை இடம்பெற விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பான மேலிட பதிலுக்காக வாசன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். காங்கிரசின் மற்ற கிளை அமைப்புகளிலும், சில மாநிலங்களிலும் அந்தந்த மாநில தலைவர்களின் படங்கள் உறுப்பினர் அட்டையில் இடம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் காமராஜர் படம் இடம் பெறக்கூடாது என்று மேலிடம் கூறி வருகிறது. காங்கிரஸ் மேலிடம் காமராஜரை புறக்கணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டால், அதை தமிழக காங்கிரசின் அனைத்து அணிகளும் சேர்ந்து எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
"

கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது

கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது
கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது
சென்னை, அக். 30–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து சரிந்தபடி உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 115 டாலர்களாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அது 87 டாலர்களாக வீழ்ச்சி அடைந்தது.
இதற்கிடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டின.
இதைத் தொடர்ந்து கடந்த 18–ந்தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டது. அது மட்டுமின்றி, டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் உபயோகிப்பாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 82 டாலர்களாக குறைந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இந்த அளவுக்கு இப்போதுதான் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
அதன்படி இந்த தடவை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு இப்போதுதான் முதன், முதலாக டீசல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல் விலை கடந்த ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு 6–வது தடவையாக குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் உரிமையை கடந்த 2010–ம் ஆண்டு எண்ணை நிறுவனங்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்தது. ஆனால் அப்போது சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக பெட்ரோலியம் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்தபடிதான் இருந்தது.
பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்த பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதன் மூலம் அது மற்ற துறைகளிலும் சுமூகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இது பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை சாதகமான அம்சமாக பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். இரண்டே வாரங்களில் டீசல் விலையில் 11 சதவீதம் குறைக்கப்படுவதை மத்திய அரசின் பல்வேறு துறைகளும் வரவேற்றுள்ளன.
டீசல் விலை அடுத்தடுத்து இந்த அளவுக்கு குறைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

Tuesday, 11 March 2014

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை -தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்



சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அபோது அவர்  கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி நாளை தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடத்தப்படு கிறது. அனைத்து வாக்கு சாவடி களிலும் ஊழியர்கள் அமர்ந்து பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
அங்கேயே விண்ணப்பப் படிவம் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் முகவரி சான்று, பே£ட்டோ, வயது சான்றிதழ் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 60,418 ஓட்டு சாவடிகளில் இதற்கான பணிகள் நடக்கிறது.
வாக்காளர் புகைப்பட அட்டை இருந்து அவர்களுக்கான பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையென்றால் ஓட்டு போட இயலாது. எனவே அவர்களும் நாளைய முகாமில் பெயர்களை சேர்க்கலாம்.
நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஒவ்வொரு கட்சியினரும் கடை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தி கூறினேன்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு குழுவிலும் மாஜிஸ்திரேட்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி, 4 பே£லீசார், வீடியோ கிராபர் ஆகியோர் இருப்பார்கள். இது தவிர திடீரென சோதனை செய்யவும் தனிக்குழு அமைக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் ‘அம்மா’ என்கிற பெயர், எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள முகப்பு தோரணம், அம்மா குடிநீர் பாட்டில், சிறிய பஸ்களில் உள்ள இலைகள், டி.ஜி.பி.யை மாற்றுவது தொடர்பான புகார்கள் ஆகியவை பற்றி தேர்தல் கமிஷனில் இருந்து இன்னும் தகுந்த உத்தரவு வரவில்லை.
கட்சிகளின் முக்கிய தலைவர்கள்  தங்களது பிரசார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 5-ந்தேதிக்குள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் யாரும் பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது.
ஓட்டுக்காக யாரேனும் பணம் கொடுத்தால் இது பற்றி புகார் தெரிவிக்க 1950 என்ற தொலைபேசி எண் செயல்பாட்டில் உள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்தலில் செலவழிக்கும் செலவு தொகைகளை வேட்பாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பணி மாற்றத்துக்கு ரூ.10 கோடி லஞ்சம்: பவன்குமார் பன்சால் மருமகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்



புதுடெல்லி,
ரெயில்வே வாரியத்தில் பணப்புழக்கம் அதிகம் உள்ள பிரிவில் உறுப்பினராக பணி மாற்றம் செய்ய ரூ.10 கோடி லஞ்ச பேரம் பேசப்பட்டு, முன்பணமும் வழங்கப்பட்டது. அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பவன்குமார் பன்சால் இதன்காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். வழக்கில் முக்கிய குற்றவாளியான அவரது மருமகன் விஜய்சிங்லா மற்றும் 9 பேரை சி.பி.ஐ. கைது செய்து வழக்குப்பதிவு செய்தது.
டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய்சிங்லா உள்பட 10 பேர் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்துடன் தொடர்புடைய குற்றச்சதியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை ஆகஸ்டு 25&ந்தேதிக்கு நீதிபதி சுவர்ண காந்தா சர்மா ஒத்திவைத்தார். அப்போது அரசுதரப்பு சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 29 தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவு

ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் மீன்பிடித்த பகுதிக்கு திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்துக்கப்பல்களில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி விரட்டினர். பின்னர் மீனவர்களை சுற்றி வளைத்து 29 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். மீனவர்களின் 7 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சத்தீவை திரும்ப பெற முடியாது மத்திய அரசு பிடிவாதம்


புதுடெல்லி,
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை இந்தியா திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு கச்சத்தீவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இலங்கையுடனான ஒப்பந்தத்தை திரும்ப பெறமுடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  1974 ம் ஆண்டு கடல் எல்லையை வரையறை செய்த போது கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது என்றும் கச்சத்தீவை தாரைவார்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கும் உரிமை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,  கருணாநிதியின் மனுவில் பொதுநலன் இருப்பதாக தெரியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்; தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.கருணாநிதி

சென்னை,
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும், 35 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை நேற்று தி.மு.க. வெளியிட்டது. இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையை தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 100 தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதி, கூட்டாச்சி தத்துவம், மதர்சார்பின்மை பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சேது சமூத்திரத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள இயற்கை வளங்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது