Friday, 31 October 2014

நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

சென்னை, அக். 31-நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டும்: ஈஸ்வரன் அறிக்கை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் 1956 நவம்பர் 1-ந்தேதி. ஆந்திரம், கர்நாடகம், கேரளம் தமிழகம் ஆகிய மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டன. அண்டைய மாநிலங்கள் எல்லாம் மாநிலம் உருவான நாளை கட்சி பாகுபாடின்றி ஒருமித்து ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடும்போது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை.

சாதி, மத வேறுபாடின்றி குறிப்பாக கட்சி வேறுபாடு பார்க்காமல் தமிழர்கள் நாம் என்ற உன்னதமான உணர்வை ஏற்படுத்தக் கூடிய நாள் இது. கர்நாடகத்தில் 1 வாரம் கொண்டாடுகிறார்கள். அவரவர் கட்சிக் கொடிகளை வாகனங்களில் கட்டுவதை இந்த 1 வாரத்திற்கும் தவிர்த்து அனைவரும் கர்நாடக மாநில கொடியை கட்டுகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் மாநிலக் கொடியை ஏற்றுகிறார்கள்.

தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கொடியை வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிக்காரர்களும் நவம்பர் 1-ந்தேதி கட்டினால் தமிழன் என்ற உணர்வு தழைத்தோங்கி நிற்கும். அண்டை மாநிலத்தவரைப் பற்றி பேசுவதை விட்டு, தமிழ்நாட்டு ஒற்றுமையை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இது தேவையான ஒன்று என்பதை உணர வேண்டும்.

தமிழக அரசோ மற்ற தமிழ் இயக்கங்களோ இதை கண்டு கொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது. நம்முடைய தமிழர் நாட்டை பேணி பாதுகாக்கும் கடமை நமக்கு உள்ளது. தமிழகத்தில் எல்லையை, இயற்கை வளங்களை, பண்பாட்டை, மொழியை, உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு உள்ளது. அதை நம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூற நமக்கான ஒரு நாள் வேண்டும்.

தமிழக அரசு தமிழ்நாடு தினத்தை கொண்டாட வேண்டும். நவம்பர்-1 தமிழ்நாடு தினம் என்பதை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் தமிழர் வரலாறு, பண்பாடு குறித்த கண்காட்சி இடம் பெற வேண்டும். இதை நாம் இப்போது செய்யத் தவறினால் நாளை தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும்.

வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிலோ தமிழ்ப் பேசுபவர்களைப் பார்த்தால் ஒன்றாகிற உணர்வு தமிழகத்திலேயே ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது உண்டாக வேண்டும். அனைத்து வீடுகளின் உச்சியிலும் தமிழகம் பூராவும் தமிழ்நாட்டுக் கொடி பறக்க வேண்டும். இதையெல்லாம் அடுத்த ஆண்டாவது உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் என் இனிய தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment