Friday, 31 October 2014

கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலையை உயர்ந்த பீடத்தில் அமைக்க வேண்டும் எச்.வசந்தகுமார் கோரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் எச்.வசந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1987-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையில், அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ்காந்தியால், கத்திப்பாரா சந்திப்பில் நேருவின் சிலை திறக்கப்பட்டது. கால சுழற்சி மற்றும் நகர வளர்ச்சி காரணமாக தற்போது இந்த சிலை மறைக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் 14-ந் தேதி, நேருவின் 125-ம் ஆண்டு தொடங்குகிறது. இதற்கென தமிழக அரசு தனி குழு அமைத்து, அவரது 125-வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதுடன், கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையை மக்கள் பார்வையில் படும் வகையில் உயர்ந்த பீடத்தில் அமைக்க வேண்டும். மேலும் சிலையை சுற்றி வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்று அமைத்து, அதனை சுற்றி சிறுவர்கள் விளையாடும் எழில்மிகு பூங்கா அமைத்திட வேண்டும்.

மேலும் நேருவின் வாழ்க்கை வரலாற்றை கல்வெட்டில் செதுக்கி, வருங்கால சந்ததியினர் அறிய செய்திட வேண்டும். இவை அனைத்தும் நேருவின் 125-ம் ஆண்டு நிறைவுக்குள் நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment