சென்னை புரசைவாக்கத்தில் 2 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
2 மாடி கட்டிடம் சென்னை புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் உள்ள 2 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து, கீழ்ப்பாக்கம், ஐகோர்ட்டு, எழும்பூர் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதலில் கட்டிடத்திற்குள் யாரும் சிக்கியுள்ளார்களா? என்று பார்த்தனர்.
இதில் கட்டிட உரிமையாளர் உத்தம் சந்த் (வயது 51), அவருடைய மனைவி சந்திராபாய் (44), மகன் நேகுல் (21), மகள் மோனிகா (21) (இவர்கள் இருவரும் இரட்டையர்கள்), கமலா பாய்(65) ஆகிய 5 பேரும் உள்ளே சிக்கி இருப்பது தெரியவந்தது.
அப்பளம் போல் நொறுங்கியது கட்டிடம் இடிந்து இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் நுழைவுவாயில் அருகே விழுந்து கிடந்ததால் சிறிய அளவிலான இடைவெளி இருந்தது. இதை பார்த்த தீயணைப்பு வீரர்கள் அந்த வழியாக சென்று உள்ளே சிக்கிய 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெரிய சுவர் விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கார் கட்டிடத்தின் கீழ்தளத்தில் கடை வைத்திருக்கும் சுந்தர் என்பவருக்கு சொந்தமானது. அதேபோல் கட்டிடத்தின் அருகே இருந்த மரத்தின் மீதும் கட்டிடத்தின் சுவர் விழுந்தது. இதனால் அந்த மரமும் சாய்ந்தது.
பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த கட்டிடம் சுமார் 62 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும். இந்த 2 மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் 4 கடைகளும், அதன்பின்னால் ஒரு வீடும் உள்ளது. முதல் மற்றும் 2–வது தளத்தில் 1980 முதல் 1990 வரையில் கல்யாண மண்டபம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடத்தை சுற்றிலும் யாரும் உள்ளே சென்றுவிடாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:–
கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தோம். இதில் 5 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். நல்ல வேளையாக இடிந்து விழுந்த கட்டிடத்தின் சுவர்கள் கீழ்வீட்டின் நுழைவுபகுதியில் விழுந்தால் ஒரு சில இடைவெளி இருந்தன.
அந்த இடைவெளி வாயிலாக 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment