Thursday, 30 October 2014

கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது

கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது
கச்சா எண்ணை விலை குறைந்ததால் டீசல்–பெட்ரோல் விலை ரூ.2.50 குறைகிறது
சென்னை, அக். 30–
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து சரிந்தபடி உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 115 டாலர்களாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அது 87 டாலர்களாக வீழ்ச்சி அடைந்தது.
இதற்கிடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டின.
இதைத் தொடர்ந்து கடந்த 18–ந்தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.37 குறைக்கப்பட்டது. அது மட்டுமின்றி, டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணை நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் உபயோகிப்பாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 82 டாலர்களாக குறைந்தது.
கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இந்த அளவுக்கு இப்போதுதான் குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
அதன்படி இந்த தடவை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு இப்போதுதான் முதன், முதலாக டீசல் விலை குறைக்கப்பட உள்ளது. பெட்ரோல் விலை கடந்த ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு 6–வது தடவையாக குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் உரிமையை கடந்த 2010–ம் ஆண்டு எண்ணை நிறுவனங்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு கொடுத்தது. ஆனால் அப்போது சர்வதேச பொருளாதார சூழ்நிலை காரணமாக பெட்ரோலியம் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்தபடிதான் இருந்தது.
பா.ஜ.க. அரசு பதவிக்கு வந்த பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைப்பதன் மூலம் அது மற்ற துறைகளிலும் சுமூகமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இது பண வீக்கத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை சாதகமான அம்சமாக பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். இரண்டே வாரங்களில் டீசல் விலையில் 11 சதவீதம் குறைக்கப்படுவதை மத்திய அரசின் பல்வேறு துறைகளும் வரவேற்றுள்ளன.
டீசல் விலை அடுத்தடுத்து இந்த அளவுக்கு குறைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

No comments:

Post a Comment