Friday, 31 October 2014

போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு

print

போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும்: ராஜ்நாத் சிங் பேச்சு
ஐதராபாத், அக்.31-

நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்கள் நீதியின் ஆலயங்களாக திகழ வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் உயரதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை முடித்துவிட்டு, ஐ.பி.எஸ். பட்டத்துடன் வெளியேறும் அதிகாரிகளுக்கு இன்று வழியனுப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

அநீதிகளை எதிர்த்து தங்களால் ஏதும் செய்ய இயலாதவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் ஆகியோர் தயக்கமின்றி அணுகக்கூடிய நீதியின் ஆலயங்களாக போலீஸ் நிலையங்கள் திகழ வேண்டும். அப்போதுதான், போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டதன் உண்மையான உள்நோக்கம் நிறைவுபெற முடியும்.

கடமையில் இருக்கும் போலீசார் எவ்வித குறுகிய மனப்பான்மையோ.., மதரீதியிலான கண்ணோட்டமோ இன்றி பணியாற்றினால்தான் உங்களது சீருடைகள் உண்மையில் ஒளிரும். அதன் மூலம் மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக விளங்க முடியும்.

முன்னர், நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசை பாதுக்காப்பதே போலீசாரின் பணியாக இருந்தது. ஆனால், நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தப் பிறகு இன்றோ.., சராசரி மக்களை பாதுகாப்பது உங்களின் பணியாக மாறியுள்ளது.
  
நாட்டின் முதல் சேவகனாக பணியாற்ற விரும்புவதாக நமது பிரதமர் ஏற்கனவே கூறியதுபோல், இந்த சமுதாயத்துக்கு சேவையாற்றும் மனப்பக்குவத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டை பாதுகாப்பாகவும், சமூக மற்றும் மத ஒற்றுமை கொண்டதாகவும் பராமரிப்பதே உங்களது நோக்கமும், எங்களது நோக்கமும் ஆக உள்ளது. நாடும், நாட்டின் மக்களும் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இந்தியா பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த வல்லரசாக உருவாக முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment