சென்னை, ஜூன் 30–
சென்னை ஐகோர்ட்டில், ஒரு வக்கீலிடம் உதவியாளராக பணியாற்றும் டி.கோபாலகிருஷ்ணன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக உள்துறை செயலாளர் கடந்த 18–ந்தேதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை ஓட்டியவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகன பதிவுச் சான்றிதழை பறிமுதல் செய்யவேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரை அபராதம் விதிக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளார். எனவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தில் பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 18ந் தேதி தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் வசந்தகுமார் ஆஜராகி வாதிட்டார். அவற்றின் விவரம்:
வக்கீல்:– தாக்கல் செய்யப்பட்டுள்ள இது வழக்கு பொதுநல வழக்கு...
நீதிபதிகள்:– ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி மக்கள் சாகவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கா?
வக்கீல்:– இல்லை. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் தான் விதிக்க முடியும். அதற்காக ஆவணங்களை, வாகனங்களை பறிமுதல் செய்ய சட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்று கூறியிருந்தது. ஆனால், இப்போது ஆவணங்கள், வாகனங்கள் பறிமுதல் என்று புதிய கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.
நீதிபதிகள்:– இந்த வழக்கில் பொதுநலன் என்று எதுவும் இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதன்பின்னர், நியூ இந்தியா மக்கள் அமைப்பு என்ற அறக்கட்டளையின் தலைவர் ஜெ.எஸ்.நிம்முவசந்த் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அந்த வழக்கு மனுவில், ‘கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடந்த 18–ந்தேதி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்டவிரோதமானது. ஹெல்மெட் அணிவதால் மட்டுமே விபத்தில் சிக்குபவர்கள் உயிர் பிழைத்து விடுவார் என்று கூற முடியாது. விபத்தில் தலையில் மட்டும் அடிப்பட்டு யாரும் சாவதில்லை. மேலும், ஹெல்மெட் அணிவது என்பது பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முடியாத காரியம். கொண்டை போட்ட பெண்ணால், ஹெல்மெட் அணிய முடியாது. எனவே, வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருக்கும் பெண்கள், குழந்தைகளும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விவாதம் பின்வருமாறு:–
நீதிபதிகள்:– அறக்கட்டளை என்று கூறியுள்ளீர்கள். இந்த அறக்கட்டளையின் அடிப்படையில் நோக்கத்தில், போக்குவரத்து, சாலை, மோட்டார் சைக்கிள் தொடர்பான ஏதாவது உள்ளதா?
மனுதாரர் நிம்மு வசந்த்:– அதுதொடர்பான தீர்மானம் இயற்றியுள்ளோம்.
நீதிபதிகள்:– தீர்மானம் என்பது தேவையற்றது. அறக்கட்டளை தொடங்கும்போது என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ? அதில் போக்குவரத்து உள்ளிட்டது தொடர்பான ஏதாவது ஒரு தகவல் உள்ளதா?
மனுதாரர்:– பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிய முடியாது. இப்போது அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, பொதுமக்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்குவது போல உள்ளது. டாஸ்மாக் விற்பனைக்கு ஊக்கம் அளிக்கும் அரசு, சாலைகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிபதிகள்:– இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.