Monday, 21 December 2015

நோயாளி போல சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி 3 கிலோ தங்கம் கடத்தி வந்த பெண் விமான நிலையத்தில் கைது

ஆலந்தூர், டிச.22-

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது மியான்மர் நாட்டைச் சேர்ந்த நூர்ஜகான் (வயது 54) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்தார். இவர் விமானத்தில் இருந்து சக்கர நாற்காலியில் வந்தார்.

சிகிச்சைக்காக சென்னை வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை. ஆனால் நூர்ஜகானின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால், சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனே பெண் சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது நூர்ஜகான் ஆடைகளில் மறைத்து வைத்திருந்த 30 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். 3 கிலோ எடை கொண்ட இந்த தங்கக்கட்டிகள் ரூ.90 லட்சம் மதிப்புள்ளவை. இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நூர்ஜகானை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்காக வருபவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகமாக சோதனை செய்வதில்லை என்பதை அறிந்த கடத்தல் கும்பல், மியான்மர் பெண்ணை கடத்தலில் ஈடுபடுத்தியது தெரியவந்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருவது போல் நடித்து, நூதன முறையில் தங்கம் கடத்திய சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment