Monday, 21 December 2015

நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை

நெல்லிக்குப்பம், டிச. 21–நெல்லிக்குப்பத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார்: பள்ளி முதல்வருக்கு சரமாரி அடி–உதை
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் பட்டாம் பாலகத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெய்வேலியை அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்த இருதயராஜ் (வயது 32) என்பவர் பள்ளி முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அப்பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை சரியாக படிக்கவில்லை என ஆபாசமாக பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவி தனது அண்ணன் ஷேக் மிஸ்வானிடம் முறையிட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த ஷேக் மிஸ்வான் மற்றும் ஜமால் முகமது, ஹாஜாபாய் உள்பட 20 பேர் நேற்று மாலை பள்ளிக்கு திபுதிபுவென வந்தனர். அங்கிருந்த பள்ளி முதல்வர் இருதயராஜிடம் மாணவியிடம் எப்படி ஆபாசமாக பேசலாம் என கூறி சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்து அவரை தரதரவென நடுரோட்டுக்கு இழுத்து வந்தனர். அங்கும் அவரை தாக்கினர். இதில், பள்ளி முதல்வர் அணிந்திருந்த உடைகள் கிழிந்து கந்தலானது. தலையிலும் ரத்தம் கொட்டியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்திருந்த பள்ளி முதல்வரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment