Monday, 21 December 2015

இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்

விழுப்புரம், டிச. 20–இப்போது தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 100 இடங்களை பிடிக்கும்: ஜி.கே.மணி சொல்கிறார்
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ம.க.வின் 8–வது கிழக்கு மண்டல மாநாடு மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இம்மாநாடு விழுப்புரம் பூத்தமேட்டில் வரும் 3–ந் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இருமாவட்டங்களை ஒருங்கிணைந்து நடக்கிறது. ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் பூரணமதுவிலக்கு, லஞ்சம் ஊழலற்ற ஆட்சி, பாசனமேம்பாட்டுத்திட்டம், இலவச கல்வி, தேசிய சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இம்மாநாடு நடக்கிறது. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வரைவுதேர்தல் வாக்குறுதிக்குப்பிறகு மக்கள் மனநிலை மாறிவருகிறது. அவரது தேர்தல் அறிக்கையை மக்கள் பேசிவருகிறார்கள். இன்று தேர்தல் நடந்தாலும் பா.ம.க. 80, 100 சீட்டுகளை பெறுவது உறுதி.
கனமழையால் சென்னை, காஞ்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் இன்னும் நிவாரணப்பணிகளும், மீட்புபணிகளும் சரியாக நடக்கவில்லை. இதனை அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வெள்ளநிவாரணப் பணிகள் கணக்கெடுப்பில் குளறுபடி நடப்பதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காவிட்டால் பா.ம.க. முன்னின்று போராட்டத்தை நடத்தும்.
இளைஞர்கள், மாணவிகள், மாணவர்களை சீரழிக்கும் வண்ணம் பாடல்கள் இடம்பெறுகின்றன. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்போது நடிகர் ஒருவர் பாடியிருக்கும் பாட்டு தொடர்பாக கேட்டபோது, தமிழக அரசுதான் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment