திருச்சி, டிச. 21–
திருச்சி உறையூர் ராமலிங்க நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவர் தனது வீட்டில் சொந்தமாக அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களது மகள் அன்பரசி. தம்பி அசோக்குமார்.
நேற்று மாலை அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்குள் நுழைந்தது. 7 பேரில் ஒருவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.
அவர்களை கண்டதும் விஜயகுமார் அதிர்ச்சி அடைந்தார். என்ன என்று அவர் விசாரிப்பதற்குள் அந்த கும்பல் திடீரென அவரை தாக்கியது. கத்தியாலும் அவரது உடலை கீறியதால் குடும்பத்தினர் நிலை குலைந்து போனார்கள்.
அதனை பயன்படுத்திய அந்த கும்பல் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் மற்றும் ஆவணங்களை அள்ளியது. பிறகு கத்தி முனையில் மிரட்டி விஜயகுமார், பிரேமா, அன்பரசி, மற்றும் அசோக்குமார் ஆகியோரை அவர்களது சொகுசு காரிலேயே அந்த கும்பல் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து கடத்தியது.
காருக்குள் 11 பேர் இருந்தனர். அப்போது காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீஸ் உடை அணிந்த நபர் கூறினார். உடனே கார் மரக்கடை பகுதிக்கு வந்தது. முன்னால் சென்ற வாகனத்தை கார் கடக்க முடியாமல் இருந்த போது காரில் கடத்தி செல்லப்பட்ட விஜயகுமார் கதவை திறந்து காரில் இருந்து குதித்து தப்பினார். அவரது குடும்பத்தினரை அந்த கும்பல் கடத்தி சென்று விட்டது.
இதுபற்றி விஜயகுமார் உறையூர் போலீசில் உடனடியாக புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது குடும்பத்தினரை போலீசார் தேட தொடங்கினார்கள். இந்த நிலையில் கரூர் அருகே மாயனூர் அணை பகுதியில் விஜயகுமார் குடும்பத்தினரை விடுவித்த அந்த கும்பல் காரையும் அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
அவர்கள் கைப்பற்றிய நகை, பணம், ஆவணங்களை கொண்டு சென்றனர். தாங்கள் விடுவிக்கப்பட்ட தகவல் விஜயகுமாருக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று போலீசார் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டார்.
கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த 7 பேர் கொண்ட கும்பல் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி விஜயகுமாரிடம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.
மேலும் அவர்களுக்குள் ரூ.10 லட்சம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment