சென்னை தொழில் அதிபர் வீட்டின் பூட்டிய அறையில் இருந்து மேலும் 34 சிலைகள் மீட்கப்பட்டன. இவை ஆயிரம் ஆண்டு பழமையானவை என்று தொல்லியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையை சேர்ந்தவர் தொழில் அதிபர் தீனதயாளன். அவரது பங்களா வீட்டில் ரூ.50 கோடி மதிப்புள்ள 55 பழங்கால கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர்.
வெளிநாட்டுக்கு கடத்த...
தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் மிகவும் பழமையான சிலைகள் என்று தெரியவந்துள்ளது. அந்த சிலைகளில் சாமி சிலைகள் அதிக அளவில் இருந்தன. அவற்றை கோவில்களில் திருடி வெளிநாட்டிற்கு கடத்தி செல்வதற்கு திட்டமிட்டு தீனதயாளன் தனது வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
சிலைகளை மீட்டபோது தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு தப்பி சென்று விட்டார். அவரை நேரில் ஆஜ ராகுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். 15 நாட்கள் கால அவகாசம் கொடுக் கப்பட்டுள்ளது. தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் தொடர்ந்து புதையலைப் போல சிலைகள் கிடைத்த வண்ணம் உள்ளது.
அறைகளை திறந்து சோதனை
தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் பூட்டிக் கிடந்த 2 அறைகளை கோர்ட்டு அனுமதி பெற்று, போலீசார் நேற்று காலை 11 மணிக்கு திறந்து பார்த்தனர். ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், அறநிலையத்துறை அதிகாரிகள் சரவணன், இளம்பரிதி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் நாகசாமி ஆகியோர் முன்னிலையில் பூட்டிக் கிடந்த அறைகள் திறக்கப்பட்டன. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அந்த அறைகளை போலீசார் துருவித்துருவி சோதனை போட்டனர்.
சந்தனப்பேழை போன்ற அழகான பெட்டி தீனதயாளனின் படுக்கையறைக்குள் இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது கண்ணைக்கவரும் ஐம்பொன் சாமி சிலைகள் ஏராளமாக இருந்தது. அத்தனையும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிலைகள் என்று தெரியவந்தது.
மொத்தம் 34 சாமி சிலைகளை போலீசார் மீட்டனர். அவற்றில் 7 பெரிய சாமி சிலைகள் காணப்பட்டது. ஒரு புத்தர் சிலையும் இருந்தது. இன்னொரு அறையை திறந்தபோது அதற்குள் 42 ஓவியங் கள் காணப்பட்டன. அந்த ஓவியங்கள் அனைத்தும் புராதன சின்னம் போன்று காணப்பட்டன. கலைநுட்பத்துடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
யானை தந்த சிலைகள்
கைப்பற்றப்பட்ட சிலைகளில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 3 கிருஷ்ணன் சிலைகள் உள்ளன. 2 பசு சிலை களும் யானை தந்தத்தால் செய்யப்பட்டதில் உள்ளன.
தீனதயாளன், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள கணக்கு ஆவணங்கள், 500 தமிழக கோவில்களின் புகைப்படங்கள், தங்க முலாம் பூசப்பட்ட ஏராளமான சாமி பட ஓவியங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாரி பேட்டி
சோதனை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது 2 அறைகளை திறந்து சோதனை நடத்தினோம். மேலும் 2 அறைகள் திறக்கப்பட வேண்டியுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த சிலைகள் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய விலைமதிக்க முடியாத சிலைகள் என்று தொல்பொருள் ஆய்வு நிபுணர் நாகசாமி கருத்து தெரிவித்துள்ளார். சோதனை தொடர்ந்து நடத்தப்படும். பூட்டிக் கிடக்கும் மேலும் 2 அறைகளையும் திறந்து சோதனை நடத்துவோம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment