Thursday, 2 June 2016

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை,
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மாநில மொழி இணையதளங்கள்பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தின் இணையதளம் தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளில் மட்டும் செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலக இணையதளம் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளம், மராட்டியம் ஆகிய மொழிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.
இந்தி தவிர்த்த பிற மொழிகளின் முக்கியத்துவத்தை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பா.ம.க. வலியுறுத்தல்மத்திய அரசின் ஆணைகளும், அறிவிப்புகளும் மக்களை அவர்களின் மொழியில் சென்றடையவும், மக்கள் தங்களின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் அரசுக்கு அவர்களின் தாய்மொழியில் தெரிவிக்கவும் வசதியாக 8–வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அறிவியலும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரு மொழியை அலுவல் மொழியாக அறிவிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. ஆனால், தொலைத்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துவிட்ட நிலையில் இப்போது எந்த சிக்கலும் இல்லை.
ஆட்சி மொழியாக்க வேண்டும்8–வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க இப்போது தேவைப்படுவது மத்திய அரசின் அனுமதி ஒன்று மட்டுமே. மாநில மொழி பேசும் மக்களை அவர்களின் தாய்மொழி மூலமே அணுக முடியும் என்ற அளவுக்கு முதிர்ச்சியான கருத்தை பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு செயல் வடிவம் தரும் வகையில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் எந்த தடையும் இருக்க முடியாது.
அதுமட்டுமின்றி, 2014 மக்களவைத் தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில், ‘‘இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் சாதனைகளின் களஞ்சியமாக திகழும் அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் வகையில் தமிழ் உள்ளிட்ட 8–வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment