Thursday, 2 June 2016

கருணாநிதியின் 93–வது பிறந்த நாள்: ‘மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள்’ தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாளை மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
93–வது பிறந்த நாள்
தமிழினத் தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாள் தி.மு.க. வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஒவ்வொரு கட்சி தொண்டர்களின் உணர்வோடு பின்னிப் பிணைந்த நாள். கட்சி தொண்டர்கள் அனைவரும் தங்களின் இல்ல விழாவாக கொண்டாடி மகிழும் நாள் என்பதை நானறிவேன்.
தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் அரிதான மக்கள் சேவையை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் அவரது பிறந்த நாளை இதயப்பூர்வமாக கொண்டாடி வருகிறோம்.
இளைஞர் அணியின் கொண்டாட்டம்
ஆகவே நமக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவராக இருக்கும் தலைவர் கருணாநிதியின் 93–வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் அணி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டும், ரத்த தானம் செய்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடும் படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழினத்திற்காக, அடித்தட்டு மக்களுக்காக சீர்மிகு சேவையாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதி மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழர் தலைநிமிர்ந்து வாழ தன் பணியைத் தொடரும் வகையில் இளைஞர் அணியின் கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment