சென்னை,
தமிழக சட்டசபையில் சபாநாயகராக ப.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மே 25–ந் தேதி தற்காலிக சபாநாயகர் செம்மலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜூன் 3–ந் தேதியன்று (இன்று) காலை 10 மணிக்கு அவை கூடுகிறது. அன்று சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ஜூன் 2–ந் தேதி பகல் 12 மணிக்குள் சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
வேட்புமனு தாக்கல்
சபாநாயகர் பதவிக்கு ப.தனபாலையும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமனையும் வேட்பாளர்களாக ஆளும் கட்சியான அ.தி.மு.க. அறிவித்தது. இவர்கள் கடந்த ஆட்சி காலத்திலும் முறையே அதே பதவியை வகித்தவர்கள்.
இந்தநிலையில், ப.தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக சட்டசபை செயலாளர் அறைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். முதலில் ப.தனபாலும், பின்னர் பொள்ளாச்சி ஜெயராமனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிகாரபூர்வமாக...
அவர்களுடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ததும் அவர்களுக்கு அமைச்சர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பகல் 12 மணி வரை வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும், ப.தனபாலை சபாநாயகராக தற்காலிக சபாநாயகர் செம்மலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார். அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமனை துணை சபாநாயகராக சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பார்.
வாழ்த்து
சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பார்கள். அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற தி.மு.க. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் வாழ்த்துவார்கள்.
வாழ்த்துரைக்கு சபாநாயகர் ஏற்புரை ஆற்றுவார். அதோடு இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment