Saturday, 27 June 2015

மறைந்துபோன பழைய மணியார்டர் முறை: மின்னணு மூலம் பணம் அனுப்பும் புதிய வசதி

சென்னை, ஜூன்.28-        

தபால் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதி கொண்டுவரப்பட்டதால், 135 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மணியார்டர் அனுப்பும் பழைய முறை மறைந்து போய்விட்டது. விரைவான சேவைக்காக இணையதள உதவியுடன் ‘மணியார்டர்’ அனுப்பும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சேவைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-        

மணியார்டர் முறை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறுவது தவறு. பழைய மணியார்டர் முறை தற்போது நிறுத்தப்பட்டு, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ‘இன்ஸ்டன்ட்’ மணியார்டர் முறை, ‘மொபைல்’ பண பரிமாற்றம், சர்வதேச பண பரிமாற்றம் என்பது உள்பட பல்வேறு சேவைகள் உள்ளன.         

இன்ஸ்டன்ட் மணியார்டர் முறையில் ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை அனுப்பலாம். இதற்காக கமிஷன் தொகையாக ரூ.100 முதல் ரூ.120 வரை எடுக்கப்படும்.  வாடிக்கையாளர் பணம் செலுத்தியதும், அவருக்கு 16 இலக்க எண் வழங்கப்படும். அதை அவர் யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறாரோ அவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் தபால் நிலையத்துக்கு சென்று அந்த நம்பரை அங்கு கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் பதிவு செய்து அடையாள அட்டை நகலுடன் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.         

இதேபோல், மொபைல் பண பரிமாற்றத்தில் பணம் அனுப்ப வருபவர் பணத்தை பெறுபவரின் மொபைல் எண்ணை தர வேண்டும். பணத்தை செலுத்தியதும், ரகசிய எண் பணம் பெறுபவரின் மொபைலுக்கு சென்றுவிடும். பின்னர், அவர் அந்த ரகசிய எண்ணை தபால் நிலையத்துக்கு கொண்டுவந்து காண்பித்து, அடையாள அட்டை நகலை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை தான் அனுப்ப முடியும். கமிஷன் தொகையாக ரூ.45 முதல் ரூ.112 வரை எடுக்கப்படும். இந்த 2 சேவைகளிலும் பணம் அனுப்பிய ஒரு மணி நேரத்துக்குள்ளேயே உரியவருக்கு சென்றுவிடும்.        

மேலும் ‘மின்னணு வாணிபம்’ என்ற பார்சல் முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது ஆன்-லைன் வர்த்தகம் செய்யும் நபர்களுக்கு அந்த நிறுவனம் எங்கள் மூலமாக பொருட்களை அதிகளவில் அனுப்பி வருகின்றனர். அதேபோல், ‘ஸ்பீடு போஸ்ட்’ முறையில் 2 தடவை டெலிவரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.        

‘மின்னணு வாணிபம்’ மூலம் ஏராளமான பார்சல்கள் அனுப்பப்பட்டு வருவதால் அதை கொண்டு செல்வதற்கு வசதியாக புதிய பைகள் வாங்க ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பைகளில் 15 கிலோ வரை பார்சல்களை சுமந்து செல்லலாம்.         இவ்வாறு அவர் கூறினார்.        

சென்னை அண்ணா சாலை மற்றும் ஜார்ஜ் டவுனில் உள்ள தபால் நிலையங்களில் ‘போஸ்ட் ஷாப்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பேப்பர், பேனா, பென்சில், கத்தரிக்கோல், ‘ஸ்டேப்ளர் பின்’ போன்ற எழுதுபொருட்களும், ‘பென்டிரைவ்’, செல்போன் போன்ற சில எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.        

காபி கப் மற்றும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், ஸ்டாம்புகள் ஆகியவற்றின் படங்கள் அடங்கிய ஆல்பங்களும் விற்பனைக்காக உள்ளன. ஆனால் இங்கு வைக்கப்பட்டிருக்கும், பொருட்களின் விலை வெளிமார்க்கெட் விலையைவிட அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.        

இதுகுறித்து ராயப்பேட்டையை சேர்ந்த செண்பகவள்ளி கூறும்போது, ‘‘பென்டிரைவ் வெளி மார்க்கெட்டில் 4 ஜி.பி. ரூ.250 முதல் கிடைக்கிறது. ஆனால் இங்கு விலை ரூ.300. பெரும்பாலான பொருட்களின் நிலை இதுதான். எனவே வாடிக்கையாளர்கள் பார்ப்பதோடு சரி, யாரும் வாங்குவதில்லை. விலையை குறைக்க முன்வர வேண்டும்’’ என்றார்

No comments:

Post a Comment