சென்னை, ஜூன் 29–
சென்னை ஐகோர்ட்டில், கோபாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றை விசாரித்த ஐகோர்ட்டு, வருகிற ஜூலை 1–ந்தேதி முதல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்து பயணம் செய்பவர்கள் ஆகியோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த 18–ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனம், அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்வார்கள். ஆவணங்கள் இல்லாத வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்வார்கள். அந்த ஆவணங்களை காட்டிய பின்னர், போலீசாரிடம் சான்றிதழ் பெற்று சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் புதிய ஹெல்மெட் வாங்கி, அதற்கான ரசீதை போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று கூறுவது தேவையில்லாத குழப்பத்தையும், சிரமத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும். மேலும், வாகனங்களில் ஆவணங்களையும் பறிமுதல் செய்வது என்பது சட்டவிரோதமாகும். எனவே, கடந்த 18-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது
No comments:
Post a Comment