சென்னை, ஜூன்.29–
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் என்.ராஜராஜன்.
இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
என் தந்தை மாதவன், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் ஒரு லாரியை வங்கியில் கடன் பெற்று வாங்கினார். இந்த லாரியை சிதம்பரம் மேலவீதியில் பழக்கடை வைத்திருக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் என் தந்தையின் நண்பர். இவர், இந்த லாரியை தனக்கு குத்தகைக்கு தரவேண்டும் என்றும் வங்கியில் செலுத்த வேண்டிய மாதத் தொகையை தானே செலுத்தி விடுவதாகவும், முன் பணம் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறினார். இதன்படி ஏற்பட்ட வாய்மொழி ஒப்பந்தப்படி, அந்த லாரியை பாலகிருஷ்ணனுக்கு என் தந்தை வழங்கினார்.
ஆனால், அவர் சொன்ன படி தவணைத் தொகையை செலுத்தவில்லை. லாரியையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று என் தந்தை கூறியதும், அந்த லாரியை ‘பைசல் மகால்’ முன்பு நிறுத்தியுள்ளதாகவும், அதை எடுத்துக்கொள் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
அந்த லாரியை சென்று பார்த்தபோது, பேட்டரி, சக்கரம் உள்ளிட்டவைகள் முக்கிய பொருட்கள் இல்லை. அதேநேரம், என் தந்தை மீது சிதம்பரம் டவுண் போலீசில் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொய் புகார் செய்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், என் தந்தையை மிரட்டி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கினார்.
இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் என் தந்தையை, இன்ஸ்பெக்டர் ‘லாமேக்’ அழைத்து ரூ.1.50 லட்சத்தை பால கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார். ஆனால், ரூ.90 ஆயிரத்தை பாலகிருஷ்ணன்தான் தனக்கு தர வேண்டும் என்று என் தந்தை கூறியதை இன்ஸ்பெக்டர் லாமேக் கேட்கவில்லை. பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்றும் மிரட்டினார்.
மேலும், தே.மு.தி.க. நிர்வாகி விஜயகுமார் மற்றும் அடியாட்களுடன் பாலகிருஷ்ணன் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டி தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த என் தந்தை, முதல்-அமைச்சர் தனிப்பரிவு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர், கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு என்று எல்லாருக்கும் கடிதத்தை எழுதி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் தன்னை சித்ரவதை செய்த இன்ஸ்பெக்டர் லாமேக் உட்பட பலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து சந்தேகச் சாவு என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு உள்ளதால், உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது. என் தந்தை தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 3 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சிதம்பரம் டவுண் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
"
No comments:
Post a Comment