Wednesday, 1 July 2015

கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு

கன்னியாகுமரி, ஜூலை. 1–கன்னியாகுமரி அருகே விசைப்படகு மோதி வள்ளம் உடைந்தது: 4 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு
நெல்லை மாவட்டம் கூட்டப்புளி வாடி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 30). இவருக்கு சொந்தமான வள்ளம் மூலம் இன்று அதிகாலை இவரும், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (35). கூட்டப்புளி கோவில் தெருவைச் சேர்ந்த பெனடிக்ட் (51), தெற்கு தெருவைச் சேர்ந்த சிரியாஸ் (62) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் கூட்டப்புளியில் இருந்து 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற ஒரு விசைப்படகு அவர்களின் வள்ளம் மீது மோதி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதனால் வள்ளத்தின் முன் பகுதி உடைந்து நொறுங்கியது.
கடல் நீர் வள்ளத்திற்குள் புகுந்ததால் வள்ளம் கடலில் மூழ்கியது. அந்த வள்ளத்தில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். படகில் இருந்த வலை மற்றும் மீன்பிடி கருவிகளை மீட்பதற்காக தினேஷ் போராடினார். மற்ற மீனவர்களும் உதவியை எதிர்பார்த்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அந்த வழியாக கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்த மீனவர்களை பார்த்து அவர்களை மீட்டனர்.
ஸ்டாலின், பெனடிக்ட், சிரியாஸ் ஆகிய 3 மீனவர்களையும் தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்டனர். தினேஷ் வலையை மீட்பதற்காக கடலில் நீந்தி சென்றதால் அந்த வழியாக வந்த கூட்டப்புளி மீனவர்களின் வள்ளத்தில் ஏறிக்கொண்டார்.
கன்னியாகுமரி மீனவர்களால் மீட்கப்பட்ட 3 மீனவர்களும் அவர்களின் உடைந்த வள்ளமும் கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ், சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமணி, ஏட்டு நீலமணி ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மற்றும் படகில் இருந்த 16 மீன்பிடி தொழிலாளர்களையும், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குத்தந்தை நசரேன், பங்கு பேரவை துணை தலைவர் லியோன், செயலாளர் சேவியர் அமலதாசன், கல்விக்குழு பொறுப்பாளர் பிரபா, மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கத்தலைவர் செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment