சென்னையில் உளவுத்துறை கண்காணிப்பு தீவிரம், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பு- சென்னை காவல் ஆணையர் அருண்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு - காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கோவில்கள் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment